ADVERTISEMENT

பல்லடம் படுகொலை; குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

07:41 AM Sep 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என 4 பேரும் தெரிவித்துள்ளனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஏற்கனவே கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற இரண்டு பேரையும் உடனடியாகப் பிடிக்க வேண்டும் எனச் சாலை மறியல் போராட்டத்தில் மீண்டும் உறவினர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லத்தம்பி என்பவரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டுவதற்காகக் காவல்துறையினரை பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற செல்லதுரை, போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். அப்பொழுது செல்லதுரையின் வலது கால் முறிந்தது. அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் போலீசார்.

இதனையடுத்து முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் பிடிபட்ட இரண்டு குற்றவாளிகளையும் ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில், நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு வெங்கடேஷை அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் கொலைக்கான ஆயுதங்கள் எங்கே இருக்கிறது என்று காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது குற்றவாளி வெங்கடேஷ் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தப்பிக்க முயன்ற வெங்கடேஷை இரண்டு கால்களிலும் சுட்டு போலீசார் பிடித்துள்ளதாக பல்லடம் டிஎஸ்பி சௌமியா தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த வெங்கடேஷுக்கு பல்லடம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று இரவு மற்றொரு முக்கிய குற்றவாளியான வெங்கடேஷின் தந்தை ஐயப்பனை கைது செய்த போலீசார், அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT