/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm 700.jpg)
சேலத்தில் அரசுப்பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்கள் நலனுக்காக பாமக ஒன்றுமே செய்யவில்லை என்றார்.
சேலத்தில் அரசுப்பொருட்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜூலை 29, 2018 மாலை நடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வழக்கம்போல் ஜெயலலிதா ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து நீண்ட பட்டியலை வாசித்தார்.
பின்னர் அவருடை பேச்சு பாமக பக்கம் சென்றது. ''பாமகவால் வன்னியர்களுக்கு பெரிய அளவில் எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தமிழ்நாட்டுக்காக எந்த நல்ல திட்டங்களையும் பெற்றுத்தரவில்லை. வன்னியர் சமூகத்தினர் மேம்பாட்டுக்கும் எதுவும் செய்திடவில்லை.
ஆனால் ஜெயலலிதா அரசுதான் அந்த சமூகத்தினருக்காக நிறைய நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கிறது. இப்போதுகூட, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைப் பாராட்டி, பாமக தரப்பில் யாரும் ஒரு நன்றிகூட சொல்லவில்லை.
வன்னியர்கள் நலனுக்காக வன்னியர் நல அறக்கட்டளைக்கு அந்த சமூகத்தினர் பல கொடைகளை வழங்கியுள்ளனர். அந்த சொத்துகளை பலர் ஆக்கிரமித்து விற்று விட்டனர். வன்னியர் நல அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை மீட்டு, அதை அந்த சமூகத்தினருக்கு உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது,'' என்றார் எடப்பாடி பழனிசாமி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)