Advertisment

கோலாகலமாக நடைபெற்ற பழனி முருகன் குடமுழுக்கு விழா 

palani murugan temple festival 

Advertisment

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் சன்னிதானம், அடிவாரம், கிரி வீதியில் லட்சம் பக்தர்கள் வரை திரண்டு நின்று குடமுழுக்கு விழாவை கண்டுகளித்து விட்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்த குடமுழுக்கு விழாவிற்காக 23 ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என முருக கடவுளைப் போற்றிப் பாட தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

முன்னதாக கங்கை, காவிரி, சண்முக நதி எனப் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டு சென்று கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர். அதிகாலை 5 மணி முதல் சிவாச்சாரியார்கள் ஓதுவார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 8.45 மணிக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் பச்சைக்கொடி காட்டியவுடன்குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. அதனைத்தொடர்ந்து குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தண்ணீர் பீய்ச்சும் கருவிகள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டபக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழா முடிந்த பின் முருகனை தரிசிக்க மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.பக்தர்களை மலை மீது அனுப்பி விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல் முருக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் ஹெலிகேம் பறக்க விடப்பட்டு கண்காணிப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குடமுழுக்கு விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

புறவழிச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு புளியம்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள ஆர்வமாக முருக பக்தர்கள் பலரும் பழனியில் குவிந்துள்ளனர். பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மலை மீதும் படி பாதையில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள் புனரமைப்பு பணி செய்யப்பட்டுள்ளது.கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் குடமுழுக்குப் பணிகளில் ஈடுபட்டுபணியை சிறப்பாக செய்திருப்பதைக் கண்டு முருக பக்தர்கள்பூரித்துப் போய் விட்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe