Advertisment

சீறும் காளைகள்; பாயும் வீரர்கள் - தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு

Palamedu Jallikattu started

Advertisment

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (15-01-24) 7 மணிக்கு தொடங்கி மாலை 5:15 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 851 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வந்தனர்.

காலையிலிருந்து நடைபெற்று வந்த இப்போட்டி 10 சுற்றுகளுடன் நிறைவுபெற்று, அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்திருந்தார். இதனால், தமிழக முதல்வர் சார்பில் வழங்கப்படும் கார் ஒன்றைப் பரிசாகப் பெற்றார். அதனைத்தொடர்ந்து, 13 காளைகளை அடக்கி ரஞ்சித் இரண்டாம் இடத்தையும், 9 காளைகளை அடக்கி சிவகங்கை முரளிதரன் மற்றும் தேனி முத்துகிருஷ்ணன் 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

Advertisment

இந்த நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (16-01-24) மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 1000காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா 1 கார் பரிசும், இரண்டாம் வீரருக்கு பைக்கும், இரண்டாம் காளைக்கு கன்றும் பசுமாடும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்க காசுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

jallikattu palamedu pongal
இதையும் படியுங்கள்
Subscribe