ADVERTISEMENT

“அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க...” - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சலசலப்பு

03:52 PM Jan 16, 2024 | mathi23

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

ADVERTISEMENT

முன்னதாக, மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தக்கூடாது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதிப் பெயரை தவிர்க்க வேண்டும் என்றும், காளைகளை அவிழ்த்து விடும்போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு ஜாதிப் பெயர் குறிப்பிடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு ஜாதிப் பெயர் சொல்லி அவிழ்க்கக் கூடாது என்றும் உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (15-01-24) 7 மணிக்கு தொடங்கி மாலை 5:15 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 851 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (16-01-24) மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 1000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பாலமேடு பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், காளையின் உரிமையாளர் ஒருவர் தனது பெயரோடு ஜாதிப் பெயரை சேர்த்து சொல்லுமாறு வர்ணனையாளரிடம் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காளையின் உரிமையாளர் ஒருவர் தனது பெயரோடு ஜாதிப் பெயரை சேர்த்து சொல்லுமாறு வர்ணனையாளரிடம் கூறுகிறார். அதற்கு அவர், ‘அப்படியெல்லாம் சொல்லமாட்டோம், ஜாதிப் பெயரை சொல்ல முடியாது. அரசின் உத்தரவுப்படி தான் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அதனால், ஜாதிப் பெயரை சொல்ல முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. மேலும், ஜாதிப் பெயரை சொல்ல முடியாது என்று கூறிய வர்ணனையாளரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT