/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_55.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் பெயின்டிங் பிரஸ் தயாரிப்பு நிறுவனங்களில் வன உயிரினங்களின் ரோமங்களை பயன்படுத்தி பிரஸ் தயாரிக்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் முனியப்பன், வன சரக ரேஞ்சர் கிருஷ்ண மூர்த்தி, வனக்காப்பாளர் பொன் முனியசாமி, பேச்சிமுத்து, வனவர் பிரசன்னா, அழகர் ராஜ், வன காவலர் ராமசாமி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முருகேஷ், ராமசாமி உள்ளிட்ட வனத்துறை சிறப்பு குழு கோவில்பட்டி செல்லப் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சுகி பெயிண்ட் பிரஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், சிந்தடிக் மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரஸ்களுக்கும் வனவிலங்குகளின் ரோமங்களை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பிரஸ்களுக்கும் வித்தியாசம் கண்டறிந்து, வனவிலங்கு ரோமத்தினால் தயாரிக்கப்பட்டதாக கருதப்படும் பிரஸ்களை அந்த நிறுவனத்தில் இருந்து 1 mm அளவுள்ள பிரஸ் முதல் 63 mm அளவுள்ள பிரஸ் வரை மொத்தம் 13 வகையான 182 பிரஸ்களை பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_43.jpg)
இதை தொடர்ந்து கடலையூர் கிராமத்தில் உள்ள பெயிண்டிங் பிரஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் அணில் மற்றும் கீரிப்பிள்ளை ஆகியவற்றின் ரோமங்களை பயன்படுத்தி ஓவியம் வரையும் பிரஸ்களை தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தினோம். சந்தேகப்படும் படியான 182 பிரஸ்களை பறிமுதல் செய்துள்ளோம். பெங்களூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து அறிக்கை கிடைத்ததும் அதனடிப்படையில் வன பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us