Skip to main content

பத்ம விபூஷண் விருது பெற்ற மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

padma vibhushan award Srinivasa Varadhan, an alumnus of chennai presidency College

 

குடியரசு தினத்தை முன்னிட்டு இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம  பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளைச் சார்ந்த  வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அந்த வகையில் சிறந்த கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர்களுள் ஒருவராகத் திகழும் சீனிவாச வரதனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பொன்னேரியை பூர்வீகமாக கொண்ட இவர் தனது பள்ளிப் படிப்பை தனது தந்தை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலேயே பயின்றுள்ளார். அப்போது இவரின் கணித ஆசிரியர் கொடுத்த கணித ஆர்வம், கணிதத்தை விளையாட்டு போல சொல்லிக் கொடுத்த ஆர்வம் இவரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பள்ளிப் பருவம் முடிந்து தன்னுடைய கல்லூரி பயணத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் புள்ளியியல் தொடங்கி 1959 ஆம் ஆண்டு பட்டம் பெற்றதோடு, அடுத்தாண்டே முதுநிலைப் பட்டமும் பெற்றார். அதன்பிறகு கொல்கத்தாவில் முனைவர் பட்டம் பெற்றார். 

 

சிறந்த கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர்களுள் ஒருவராகவும், புள்ளியியலின் நிகழ்தகவுக் கோட்பாட்டுக்குப் பெரும் பங்களித்தவராகவும் அறியப்படுகிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கையால் அமெரிக்க அரசின் ‘தேசிய அறிவியல்’ விருதைப் பெற்றவர் . இது அமெரிக்காவில் அறிவியல்  துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ஆகப்பெரிய  விருதாகும். அத்துடன், நோபல் பரிசுக்கு நிகராக உலக அளவில் வழங்கப்படும் ‘ஏபல்’ விருதை 2008ல் வென்ற பெருமையும் இவரைச் சாரும். இந்தநிலையில்தான் 2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு, முன்னாள் மாநிலக் கல்லூரி மாணவர் என்ற அடிப்படையில் அக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும் நம்பி நாராயணன்... 

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
nambi narayanan



1994 நவம்பர் 30, அன்றைய நாளை, அந்த 53 வயது நபர் எதிர்பார்த்திருக்கவில்லை, விடியும் பொழுது அவரின் விரல்கள் சிறைக்கம்பிகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் என்பதை.  ஏ.பி.ஜே. அப்துல்கலாமுடன் இணைந்து டி1 ராக்கெட் தயாரிப்பில் துவங்கி, உலகின் முதல் திரவ எரிபொருளில் இயங்கும் என்ஜீனை அறிமுகம் செய்தவர், ‘உளவாளி’ என்ற முத்திரையின் கீழ் கைது செய்யப்பட்டார். 
 

இஸ்ரோவின் க்ரையோஜின் மோட்டார் ஆராய்ச்சியின் இயக்குனராக பணியாற்றிவந்த நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள் மற்றும் க்ரையோஜின் என்ஜீன் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால், குற்ற சதி பிரிவுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்ரோவுக்கு மட்டுமல்ல, தாய் நாட்டுக்கே அவர் செய்தது மிகப்பெரிய துரோகம் என மக்கள் கொந்தளிக்க விஞ்ஞானி நம்பி நாராயணன் உளவாளியென கலங்கத்திற்கு உள்ளானார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அவர் கொடுத்த உழைப்பின் நினைவுகள் சிறையின் வேதனையை அதிகரித்து விரக்தியை அவருக்குள் விதைத்துவிட முற்பட்டது. இப்போது விளங்குப்பூட்டி, போலிசாரால் பிடிக்கப்பட்ட கரங்கள் இதற்கு முன் சாதனைகளுக்காக கெளரவிக்கப்பட்டவை. ஆனால் அவர் கெளரவத்திற்காக உழைப்பவர் அல்ல.

 

nambi narayanan


 

நம்பியின் பள்ளிப்பருவ இறுதியில், தந்தை இறப்பிற்குபின் உழைப்பது அவருக்கு அன்றாட கடமையாகிப்போனது. மதுரை தியாகராஜ கல்லூரியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுக்கு வீட்டிலிருந்து பணம் வரும் சூழலில், நம்பியோ பகுதிநேர வேலை பார்த்து வீட்டிற்கு பணம் அனுப்பிவந்தார். மிகுந்த போராட்டங்களுக்கு நடுவில் அவரின் பொறியியல் அறிவு வியக்கும் வகையில் வளர்ச்சிப்பெற்றது. அதன் விளைவாகவே அமெரிக்காவின், நியூ ஜெர்ஸி பகுதியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலையுடன் குடியுரிமை பெற்றுவிடும் கனவுடன் திரிந்த இளைஞர்கள் மத்தியில், தன் திறமையின் பொருட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசவில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தும், அங்கிருந்து அறிவை மட்டும் பெற்றுக்கொண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
 

அது இஸ்ரோவின் குழந்தைப் பருவம், அப்துல் கலாம் உட்பட வெறும் 25 பொறியாளர்கள் மட்டும் பணியாற்றிய காலம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டு இரவு, பகலாய் நம்பி உட்பட அனைவரும் உழைக்கவேண்டியிருந்தது. ‘ட்ரீமர்’ என்ற பொருள் கொண்ட டீ1 ராக்கெட் உருவாக்கத்தில் கலாமிற்கு பெருந்துணை பொறியாளராக பணியாற்றினார். தொடர்ந்து பல படிகளிலும் நாட்டின் வளர்ச்சியென்ற உணர்வில் மட்டும் ஊக்கம் பெற்று பி.எஸ்.எல்.வி,  ஜி.எஸ்.எல்.வி ஆகிய ராக்கெட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு நம்பியுடையதாயிற்று.
 

இதற்கிடையில் திரவ எரிபொருள் பற்றிய ஆராய்ச்சி நம்பி நாராயணனால் மேற்கொள்ளப்பட்டது. பல விமர்சனங்களுக்கு மத்தியில் அப்போதைய இஸ்ரோ நிர்வாக தலைவர் சதீஸ் தவானின் ஒத்துழைப்பால் உலகின் முதல் திரவ எரிபொருள் என்ஜீனை நம்பி அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு உலகையே இஸ்ரோவை திரும்பி பார்க்கச் செய்தது. அதற்கு அடையாளமாக 1992ல் ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியில் ‘க்ரையோஜீனிக் என்ஜீன்’ பற்றிய ஆய்வுகள் துவங்கப்பட்டன. முப்பது வருட உழைப்பின் பயணாய் நம்பி நாராயணன் அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.


 

nambi narayanan

 

அந்த சாதனைகளுக்கான பரிசாய் கிடைத்தது சிறைவாசம்தான். கேரள போலீஸ் மற்றும் IB அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 50  நாட்கள் இன்னல்கள் அனுபவித்தப் பின்னர் 1995 ஜனவரி 19ல் பெயிலில் விடுதலையானார்.  நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அறிவியலாளர், அப்போது தேச துரோகியாய் அறியப்பட்டார். தொடர்ந்து இஸ்ரோவில் பணிபுரியமாட்டாமல் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு மாற்றுதல் என தொடரும் துயரங்கள் பல. அப்போது அவரது விஞ்ஞான அறிவுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டிருந்தது. அவரது உழைப்பும், சாதனைகளும் கேள்விக்குள்ளாயின. உண்மைக்கான போராட்டத்தில் துவண்டுப்போயிருந்தார் நம்பி. ஆயினும் உண்மை மீதான நம்பிக்கையில் துவண்டுவிடவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ கைக்கு மாறியது. ஒன்றரை வருட விசாரணைக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு சி.பி.ஐ. அளித்த முடிவுகளின் பேரில் இது பொய்யான வழக்கு என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை துடைத்தது. தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம் சார்பில் பொய்யான வழக்குப்பதிந்த கேரள போலீஸ் மீதும் IB அதிகாரிகள் மீதும்  நடவடிக்கை எடுக்கும்படியும், நம்பி நாராயணனுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு இழப்பீடு கொடுக்கவும் வழக்குத் தொடரப்பட்டது.

நீண்டகால போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 2018ல் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கூறி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருது டாக்டர்.நம்பி நாராயணனுக்கு 2019ம் ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. பழியால் நேர்ந்த தாழ் நிலையிலிருந்து, புகழின் உச்சிக்கு உயர்ந்தார் நம்பி.

உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாக பாவித்து உழைத்தவர் நம்பி நாராயணன். பழிகளும் சூழ்ச்சிகளும் சூழ்ந்து தாக்கினாலும், உண்மை கேடயமாய் காத்து வெற்றித் தரும் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் இந்த வெண்தாடி விஞ்ஞானி.