Paddy crops submerged in rain water Farmers involved in road blockade ...!

Advertisment

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சமேடு ஊராட்சி மன்றத்திற்குட்பட்டமுடிகொண்டான் கிராமத்தில் வெள்ளநீர் புகுந்தது. முறையான மழை நீர் வடிகால் இல்லாததைக் கண்டித்து முடிகொண்டான் விவசாயிகள் சங்கத் தலைவர் தங்கராசு தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

சம்பந்தபட்ட அதிகாரிகள் வராததால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வெள்ளம் பாதித்த நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் வெற்றிலைப்பாக்கு வைத்து கிராம பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது; "300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு இதேபோல வெள்ளநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியது. மீண்டும் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. தொடர் கனமழையால் மீண்டும் பயிர்கள் மூழ்கிவிட்டது. இனி நடவுக்கு பயிர்கள் கிடைக்காது.

இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்ததற்கு அதிகாரிகள் முறையாக வெள்ளநீர் வடியும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். மேலும் முடிகொண்டான் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் உள்ள பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிகொண்டான் கிராமத்தில் கரைவெட்டி ஏரியில் இருந்து வரும் ஓடை, குந்தபுரம் கிராமத்தில் இருந்து வரும் வாரி, திருப்பெயர் கிராமத்தில் இருந்து வரும் முறுக்கு ஓடை உள்ளிட்ட மூன்று ஓடைகள் மற்றும் வடிகால் வாரிகளை திருவெங்கனூர் வரை உள்ள ஓடைகளின் வழித்தடத்தை முழுமையாக ஆழப்படுத்தி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் இடம் வரை ஆக்கிரமிப்புகள் தொடராத வண்ணம் கரைகளை இருபுறமும் கான்கிரீட்டாலான கால்வாய்களை அமைப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

வெற்றிலைப்பாக்கு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அரியலூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அரியலூர் டி.எஸ்.பி. மதன், தலைமையிலான போலீசார் மற்றும் திருமானூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது. பொதுப்பணித்துறையினர் கிட்டாச்சி இயந்திரம் கொண்டு வடிகால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.