ADVERTISEMENT

முகநூலில் பழகி தொழிலதிபரிடம் ரூ.12.58 லட்சம் மோசடி செய்த பேச்சியம்மாள் கைது!

12:16 PM Aug 07, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முகநூல் பழக்கம் சிலரை படாதபாடு படுத்திவிடுகிறது. ஈரோடு மாவட்டம், முடக்கன்குறிச்சி அருகே கோவில்பாளையம், எம். அனுமன்பள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷும்கூட, ஒருவார முகநூல் பழக்கத்திலேயே, சிவகாசி அருகிலுள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாளிடம் ரூ.12.58 லட்சத்தைப் பறிகொடுத்து ஏமார்ந்துள்ளார்.

என்ன நடந்தது?

பனியன் கம்பெனி நடத்தி வரும் ரமேஷுக்கு, செல்வத்தின் மனைவி பேச்சியம்மாள் முகநூல் மூலம் அறிமுகமானார். பழக்கம் தொடர்ந்த நிலையில் ரமேஷிடம் பேச்சியம்மாள், “நான் சிவகாசி கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்க்கிறேன். எங்க கூட்டுறவு வங்கியில் 380 கிராம் தங்க நகைகள் ஏலத்துக்கு வருது. ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொண்டு வந்தால், அந்த நகைகளை வாங்கித் தருகிறேன்” என்று கூறியதோடு, நகைகளின் போட்டோவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார்.

ஊரிலிருந்து கிளம்பி சிவகாசி பஸ் நிலையம் வந்த ரமேஷை பல வங்கிகளுக்கு அழைத்துச் சென்றார் பேச்சியம்மாள். ரமேஷிடமிருந்து ரொக்கமாக ரூ.1.58 லட்சத்தையும், சில வங்கிகளில் உள்ள தனது கணக்குகள் மூலம் ரூ.11 லட்சத்தையும் பெற்றுக்கொண்டார். பணத்தைக் கொடுத்த ரமேஷ் நகைகளைக் கேட்டுள்ளார். அவரை சிவகாசி பேருந்து நிலையம் முன்புள்ள வங்கியின் அருகில் காத்திருக்க வைத்த பேச்சியம்மாள் “நகைகளுடன் வருகிறேன்” என்று கூறிவிட்டு டூ வீலரில் ‘எஸ்கேப்’ ஆனார்.

ரமேஷ் பேச்சியம்மாளை மாறி மாறி செல்போனில் தொடர்புகொண்டபோது, அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகுதான், பேச்சியம்மாள் தன்னை ஏமாற்றியது ரமேஷுக்கு தெரிந்தது. சிவகாசி டவுண் காவல்நிலையம் சென்ற ரமேஷ், பேச்சியம்மாள் மீது புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து தேடப்பட்ட நிலையில், பேச்சியம்மாள் குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர், சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் அவரை மடக்கிப்பிடித்தனர். பேச்சியம்மாளிடமிருந்து மோசடி செய்த பணத்தையும் மீட்டுள்ளனர்.

பேச்சியம்மாள் பிடிபட்டது எப்படி?

கடந்த 4-ஆம் தேதி பேச்சியம்மாளிடம் பணத்தைப் பறிகொடுத்தார் ரமேஷ். 5-ஆம் தேதி சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவானது. இந்நிலையில், 6-ஆம் தேதி காலையில் தனது ஆண் நண்பர் கார்த்திக்குடன் வாடகைக் காரில் மூணாறுக்கு ‘ஜாலி டூர்’ செல்வதற்குத் திட்டமிட்டிருந்தார் பேச்சியம்மாள். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், மோசடி பேர்வழி பேச்சியம்மாளைப் பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT