Advertisment

“தமிழ்நாடு முழுக்க பள்ளிகளை மாற்ற பச்சலூர் தலைமை ஆசிரியரை அனுப்பலாம்” - அமைச்சர் மெய்யநாதன்

publive-image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், பச்சலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முதலமைச்சர் விரும்பும்அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான ஹைடெக் பள்ளியாக இன்று தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. இதனால் தமிழக அரசின் கர்ம வீரர் காமராஜர் விருது வழங்கியதுடன் உணவுப் பாதுகாப்புத்துறையின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மதிய உணவைத்தரமாகவும், சுத்தம், சுகாதாரமாகவும் வழங்குவதைப் பார்த்து மத்திய அரசின் ‘வெரி குட்’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், பல தரப்பினரும் பள்ளியைக் காண வருவதுடன் தொடர்ந்து பாராட்டியும் வருகின்றனர். வெளியூர், வெளிநாடுகளில் பச்சலூர் கிராமத்தினர் நாங்கள் ‘பச்சலூர்காரன்’ என்பதில் பெருமைப்படுவதாகக் கூறி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திடீரென பச்சலூர் பள்ளிக்குச் சென்று பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து மதிய உணவு தயாரிப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு அறை, உணவு உண்ணும் அறை, தயாரிக்கப்பட்ட உணவு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவர் பள்ளிக்கு மேலும் என்ன தேவை என்பதைப் பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டார். அப்போது, “தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், தன்னார்வலர்கள், கொடையாளர்களின் பங்களிப்போடு நிறைவாக உள்ளது” என்று தலைமை ஆசிரியர் ஜோதிமணி கூறினார்.

Advertisment

publive-image

சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டிய அமைச்சர் மெய்யநாதன், நிகழ்வில் பேசும்போது, “2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதையும், தரமான மதிய உணவை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் ‘வெரி குட்’ விருதையும் பெற்ற ஒரே பள்ளி பச்சலூர் என்ற பெருமை உள்ளது. இந்த விருதுகளை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை. பள்ளிக்குள் வந்துவிட்டாலே சுற்றுப்புறச் சூழல் அருமையாக இருக்கும்.ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கிறேன். வெப்ப மயமாகும் நாட்டில், பசுமை சூழ்ந்த குளிர்ச்சியான இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் எத்தனை மணி நேரமானாலும் அமர்ந்திருக்கலாம் என்று உள்ளது. இங்கு மட்டுமல்ல இந்த தலைமை ஆசிரியர் ஏற்கனவே பணியாற்றிய மாங்குடி பள்ளியிலும் அப்படித்தான் வைத்திருந்தார். இங்கு கட்டிடங்களாவது தெரிகிறது மாங்குடியில் வனமாக காட்சியளிக்கும். அதனால் அனைவரிடமும் இருந்து வேறுபட்டிருக்கும் நல்லாசிரியர் எனலாம்.

தமிழ்நாட்டில் 30,222 பள்ளிகளில் சுமார் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுமையாகச் செயல்படுத்தும் நம்பர் ஒன் பள்ளியாகத்தலைமை ஆசிரியர் ஜோதிமணி பணியாற்றும் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு மட்டும் தான் இவர் செய்கிறாரா என்றால் இல்லை. இந்தப் பள்ளியைப் பார்த்து இவரது ஆலோசனையில் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி திறன் வகுப்பறை முதல் அனைத்து வசதிகளுடன் சிறப்பான பள்ளியாக மாற்றி உள்ளார்.

publive-image

அங்கு நான் சுற்றுச் சுவர் கொடுத்து தரமான பள்ளியைத்திறந்து வைத்தேன். அதைப் பார்த்து வடகாடு வடக்குப்பட்டி பள்ளி, பரமன் நகர் பள்ளிகளும் மாறிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் ஒதுக்கி இருக்கிறேன். மேலும் புதுக்கோட்டை விடுதி பள்ளியும் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது. இது மட்டுமா, தலைமை ஆசிரியரின் சொந்த ஊரான அழியாநிலை அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதே போல மூக்குடி பள்ளி எனப் பல பள்ளிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி அரசுப் பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் தலைமை ஆசிரியர் ஜோதிமணியை தமிழ்நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் மூலமே நியமித்து இந்தப் பணிகளைக் கொடுத்தால் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியும்” என்று பேசினார். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe