Pachalur Govt School which has become a model

பச்சலூர் அரசுப் பள்ளிக்கு 'வெரி குட்' சான்று கொடுத்த மத்திய அரசு; குவியும் பாராட்டுகள்!" என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் 14 ந் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியான சில மணி நேரத்திலிருந்து பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணிக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளில் பாராட்டு.. வெளியூர் வெளிநாடுகளில் உள்ளூர் இளைஞர்கள் பலரும் பச்சலூர்க்காரன் என்பதில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்து சாதிக்கும் அரசுப்பள்ளியால் ஊர்காரர்களான எங்களுக்கும் பெருமையாக உள்ளது என்று பேசியுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில்தான் சென்னை எழிலகத்தில் நிலஅளவைத்துறையில் உயர் பொறுப்பில் உள்ள 'பச்சலூர் உ.முருகேசன்' நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்து அனுப்பியுள்ள வாட்ஸ் அப் தகவல் அனைவரையும் கண்கலங்க வைத்து நெகிழ வைத்துள்ளது. அந்தப் பதிவு, ‘இந்திய ஒன்றிய அரசின் பாராட்டு! பச்சலூர் அரசுப் பள்ளி! முன்னாள் மாணவன் என்பதில் எகிறியதே எனக்குப் பெருமகிழ்ச்சி’ என்ற தலைப்பிட்டு அவர் எழுதியது....

Advertisment

“வகுப்பறையில் அனைவருக்கும்

வசதியாக இடமின்மையால்

வெளியில் மணற் பரப்பி

ஆட்காட்டி விரல்கொண்டு

'அ' னா 'ஆ'வன்னாவை

அழகாக எழுதிப்பழகி

அடுப்புக் கரித்துண்டை

அரைத்துப் பொடி செய்து

கோவைக்காய் சாறு கலந்து

தயாரித்த

முக்காலில் நிற்குமந்த

நெடிதுயர்ந்த

கரும்பலகையில்

வெண்பனி வார்ப்பு கொண்டு

விளக்கிட முற்பட்டாலும்

விளங்காத கணிதம் பயின்று

வரலாறு புவியியலை

வாஞ்சையோடு கற்க முனைந்து

அறுவை என்று

அலுத்துக்கொண்ட

அறிவியலையும்

அசைபோட்டு

ஆர்வமிகுதியால்

அந்நிய மொழியாம்

ஆங்கிலமும் கற்க முயன்று

மண்தரையிலிருந்து

படிப்படியாக முன்னேறி

மரப்பலகையில் உட்கார வாய்ப்புப்பெற்று

நான்கு ஐந்தாம் வகுப்புகளில்

நல்விதமாய் உள்நுழைந்து

பள்ளியில் மூத்தோரென்று

பகட்டாகப் பெருமைபேசி

பள்ளித்தோட்டத்தில்

பயிர்கள் பலசெய்து

ராஜ ஊரணியின் கருங்கல் படிக்கட்டில்

ஆர்ப்பரித்து உள்ளிறங்கி

பூவாளியில் நீர் மொண்டு

பூமாரி தெளித்து வளர்த்த

கத்தரிக்காய், வெண்டைக்காய்

சரிநிகர் பருப்புகலந்து

நாமே வைத்த சாம்பாரும்

கொத்தவரங்காய் வத்தலை

கொதிக்கும் நல்லெண்ணெய்யில்

கொத்தாக வறுத்தெடுத்து

மாணாக்கர் அனைவரும்

மகிழ்ந்துண்ட நினைவுகள் மேலிட,

பன்னீர் பூ மரங்களின்

வெண்நிற மலர் வாசமும்

தென்னை ஓலை கூரையுடன்

மண்தரை நேசமும்

நிறை ததும்பும் ராஜ ஊரணியின்

தண்ணீர் பிரவாகமும்

கண்ணின் இமைவிரிக்க

நெஞ்சாங்கூடு பரவசப்பட

நான் பயின்ற பச்சலூர்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

இப்போது....

இணையத்தில்

உள்நுழைந்து

கூகுல் தேடுபொறியில்

ஞாலத்தை கைக்குள் வைத்து

வகுப்பறைகள் அனைத்தும்

அண்டவெளியை

அண்ணாந்து பார்க்காமல்

கனிணித்திரைகள் மூலம்

கண்ணுறும் வகைகொண்ட மாணாக்கர் என

பச்சலூர் அரசுப் பள்ளி

நடுநிலைப்பள்ளியாகத் தரமுயர்ந்து

இந்திய ஒன்றிய அரசின்

இணையற்ற பள்ளியாக

இன்று திகழ்வதை

எண்ணும் போதே

உள்ளம் முழுதும் ஏற்படுதே

ஏதோவொரு நெகிழ்ச்சி!

என் சட்டைக் காலருக்கும்

எகிறியதே

கொள்ளை மகிழ்ச்சி!

எழுபதாம் ஆண்டுதன்னில்

எமக்கெல்லாம் முதல்வகுப்பில்

அரிச்சுவடி போதித்த

சின்ன வாத்தியார்

அறந்தாங்கி நாகலிங்கம்.

அப்போதைய தலைமை ஆசிரியர்

அருமைமிக்க பெரிய வாத்தியார்

அமரர் இராமகிருஷ்ணன்.

அவரைத் தொடர்ந்த

அன்புநிறை ந.சுப்பையா

அதன் பின்னர் வாய்த்த நல்

ஆசிரியப் பெருந்தகைகள்

இவரன்றி எவர் முடிப்பார்

இப்பணியைத் திறம்படவே?

எனும் கூற்றுக்கேற்ப

சாதித்துக்காட்டி

இந்திய ஒன்றியத்தையே

இன்று எம்மூர் நோக்கி திரும்பவைத்த

என் கல்லூரிக் கால தோழர்,

தற்போதைய தலைமை ஆசிரியர்,

"அழியாநிலை ஜோதிமணி" உள்ளிட்ட

அனைவரையும்

வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி” என்று பதிவிட்டு அனைவரையும் பழைய பள்ளிப் பருவத்திற்கே அழைத்துச் சென்றவர் அதற்கு மேலும் இருப்புக் கொள்ளாமல் உடனே பஸ் ஏறி பச்சலூருக்கு வந்து பள்ளியை பார்த்து தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டவர், காமராஜர் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டு தன் பள்ளி காலத்தை தற்போதைய மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் பளபளக்கும் தரையில் அழகான சீருடையில் அமர்ந்திருக்கிறீர்கள் ஆனால் நான் 1970 ல் ஒன்றாம் வகுப்பு சேரும் போது கால்ச்சட்டை மட்டும் தான் மேல்சட்டை கூட இல்லை.. இப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் பளபளக்கும் தரை இல்லை அப்போது அந்த இடத்தில் கீற்றுக்கொட்டகையில் அமர்ந்து படிக்கனும். அருகிலேயே சமையல் கூடம் நாங்களே சமைத்து சாப்பிடனும். எங்கள் வாத்தியார்களிடம் வாங்கிய அடிகளை எண்ணிச் சொல்ல முடியாது. நாங்களே குச்சி ஒடித்து வந்து கொடுத்து அடியும் வாங்குவோம். நான் 4 ம் வகுப்பு படிக்கும் போது ஆங்கிலத்தில் 3 எழுத்து வார்த்தையை படிக்கத் தெரியாமல் ஆசிரியரிடம் சன்னல் வழியாக நீட்டி கேட்கும் போது என் விரல் நழுவி எந்த வார்த்தை கேட்க வந்தோம் என்பதே மறந்ததால் அதற்கும் அடிவாங்கிய அனுபவம் உண்டு. அன்று வாங்கிய அடிகள் தான் இன்று என்னை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. எனது பெயருக்கு முன்னால் பச்சலூர் என்று போட்டுக் கொள்வதை பெருமையாக கருதுகிறேன். நீங்கள் நம் ஊர் பெயரை போற்ற உயர் பதவிகளுக்கு போக வேண்டும் என்று மலரும் நினைவுகளோடு கண்கலங்கி பேசி முடித்த போது அரங்கமே அமைதியாக இருந்தது.