ADVERTISEMENT

பச்சையப்பா அறக்கட்டளை முறைகேடுகள் தொடர்பான வழக்கு! -ஆறு மாதங்களுக்குள் அறங்காவலர் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு!

01:14 PM Dec 19, 2019 | kalaimohan

பச்சையப்பா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பா அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அறங்காவலர் குழு தேர்தலுக்கு தடை கோரியும் வழக்கறிஞர் எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, பச்சையப்பா அறக்கட்டளையை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகத்தை உயர் நீதிமன்றம்
நியமித்தது.

இந்நிலையில், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் கே.துரைசாமி, என்.ஆர்.சந்திரன், ஏ.எல்.சோமையாஜி, வக்கீல்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், வி.ஆர்.கமலநாதன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

ADVERTISEMENT


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பச்சையப்பா அறக்கட்டளை மிகவும் பழமையான அறக்கட்டளையாகும். மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது என்பதால் இந்த அறக்கட்டளையின் ஆரம்பகால வரலாறுகளையும் ஆராய்ந்தே தீர்ப்பளித்துள்ளேன். பச்சையப்பா அறக்கட்டளைக்கான நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை தற்போது இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் 6 மாத காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

மாற்றம் செய்யப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் அறக்கட்டளைக்கான உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை குத்தகைகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்தக் குத்தகை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. இவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனம், 10 நாட்களுக்குள் அந்த அரங்கங்களை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ADVERTISEMENT

அறக்கட்டளையில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகள், அறக்கட்டளையின் விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது அறக்கட்டளை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கல்லூரிகளின் விளையாட்டு மைதானங்கள் வாகன நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் அந்த இடங்கள் கல்விப்பணிக்காக பயன்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்படும் வளாகத்துக்குள் இந்த அரங்கங்கள் இருப்பதால் மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பச்சையப்பா அறக்கட்டளை விழாவைக் கொண்டாட வேண்டும். நிகழ்ச்சி நடந்த ஒரு மாத காலத்துக்குள் ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அறக்கட்டளையின் செயல்பாடு குறித்து ஆண்டுக்கு ஒருமுறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT