Advertisment

ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

ராஜராஜசோழனின் காலம் இருண்டகாலம் என்று பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எதிராக தமிழகம் எங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தார். இதனால், முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

r

அந்த மனுவில், ’’ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

Advertisment

நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-ன் படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். எனது பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்கள் குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் 5-ந் தேதி பேசிய நிலையில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில் 11-ந் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது, ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.

அதற்கு நீதிபதி பாரதிதாசன், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதி, பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Pa Ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe