Skip to main content

ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 


ராஜராஜசோழனின் காலம் இருண்டகாலம் என்று பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எதிராக தமிழகம் எங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன.   இதைத்தொடர்ந்து தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தார்.  இதனால், முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார்.

 

r

 

அந்த மனுவில், ’’ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது.   அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

 

சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

 

நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-ன் படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்.   எனது பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.   மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்கள் குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் 5-ந் தேதி பேசிய நிலையில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில் 11-ந் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது, ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.


அதற்கு நீதிபதி பாரதிதாசன், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.   மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.   ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

பின்னர் நீதிபதி, பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.