Advertisment

உயிர்ப்பறிப்பு தொடர்கிறது! நீட்டில் நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை! பெ. மணியரசன்

P. Maniyarasan

நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது. நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு! இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புகள் அதிகமாகத் தமிழ்நாட்டைத்தான் பாதிக்கின்றன.

Advertisment

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் திணித்த “நீட்” தேர்வு கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிவாங்கியது. இந்த ஆண்டும், பலரை அத்தேர்வு பலி வாங்கி வருகிறது.

கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது, திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியாகியுள்ளார்!

கேரள மாநிலம் – எர்ணாக்குளத்தில் மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாக்குளத்திற்கு நிற்கக்கூட இடமில்லாமல், கழிவறைக்குள் ஒண்டிக் கொண்டே நீண்ட தொலைவுக்கு விடிய விடிய தொடர்வண்டிப் பயணம் செய்தனர். இதனால், கிருஷ்ணசாமி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் இறந்துள்ளார்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உயிர் ஈ – எறும்பு உயிர்களைவிடவும் மலிவானவை! இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்து, இந்திய அரசின் உரிமைப் பறிப்புகளால் நேர்ந்த தமிழர் உயிர்ப் பறிப்புகள் ஏராளம்! ஏராளம்!

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால், சிங்களப் படையினால் கடலில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் 600 பேருக்கு மேல்! இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத்துக்கு இந்தியா உதவி செய்ததைக் கண்டித்து தீக்குளித்து மாண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளம்! காவிரி உரிமை மறுக்கப்பட்டு, வேளாண்மை செய்ய வழியின்றி தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாட்டு உழவர்கள் பல நூறு பேர்!

இப்பொழுது, எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள் – இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

நடுவண் பாடத் திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ.) என்பது, பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ள பாடத்திட்ட நிறுவனம்! தனியார் ஆதிக்கமும் வடநாட்டுத் தலைமையும் கொண்ட நடுவண் பாடத்திட்ட வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?

நீட் தேர்வை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்ப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை இராசத்தானத்திலும், கேரளத்திலும் தேர்வெழுத மேற்படி வாரியம் அலைக்கழித்துள்ளது. சனநாயகமற்ற இந்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, இயற்கை நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் உடனே தர வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ஆளுங்கட்சியே முன்வந்து நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து நிரந்தரமாக நீட் தேர்வை விரட்டும் வகையில், ஒருங்கிணைந்த போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

exam neet kasturi mahalingam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe