Skip to main content

அமலாக்கத்துறை அதிகாரியிடம் மீண்டும் விசாரணை!- ப.சிதம்பரம் குடும்பத்தினர் வழக்கில் வருமான வரித்துறைக்கு அனுமதி!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டிலுள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015- ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ.4.25 கோடி என்ற விலைக்கு விற்பனை செய்தனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

p chidambaram family enforcement directorate investigation


இந்தத் தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடி ஆகியவை வருமான வரிக் கணக்கில் காட்டப்படவில்லை என்று அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.


இதற்கிடையே அமலாக்கத்துறை அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தில் சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் விற்பனை செய்த நில விவகாரம் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரியான ரோகன்ராஜ் வருமான வரித்துறை சார்பில் சாட்சியம் அளித்தார். ஆனால், நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் கோர்ட்டில் பதிவு செய்யப்படவில்லை.

p chidambaram family enforcement directorate investigation


எனவே, அதிகாரி ரோகன்ராஜிடம் மீண்டும் விசாரணை நடத்தி நில விவகாரம் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - சுனிதா கெஜ்ரிவாலின் புதிய பிரச்சாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Sunita Kejriwal launched a new campaign 'Blessing Kejriwal'

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதற்காக கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு கூறுவதற்காக வாட்ஸ் ஆப் எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் இன்றில் இருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று பேசியுள்ளார்.

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.