ADVERTISEMENT

ப.சிதம்பரம் இருப்பது பூமிக்குதான் பாரம்! எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

02:40 PM Aug 13, 2019 | kalaimohan

காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் இருப்பது இருப்பது பூமிக்குதான் பாரம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 13) திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது:

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேட்டூர் அணை நிரம்பியதால் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பகல் நேரம் என்பதால் இப்போது அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆற்றில் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். கடைமடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். ஏரி, குளங்களை தூர் வாரும் பணிகளைக் கண்காணிக்க தனியாக ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார்.

இப்போது வாய்க்கால்களில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர்தான் போக முடியும். நாற்று நடவுக்கு இந்த தண்ணீர் போதுமானது. விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள், உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் தயார் நிலையில் உள்ளன. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளும் நிரம்பி விட்டதால், தமிழகத்திற்குக் கூடுதலாக தண்ணீர் வரும். அதனால் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும்.

டெல்டா மாவட்ட கால்வாய்கள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதி பெற்று, கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை கூறியிருக்கிறார். கனமழை பெய்த அடுத்த நாளே, அமைச்சர் உதயகுமார் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாயில் நிவாரணப் பணிகள் செய்வதாக கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் செய்ய முடியும்? ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? காவிரி பிரச்னையைத் தீர்த்து வைத்தாரா? தமிழகத்திற்கு வேறு திட்டங்கள் கொண்டு வந்தாரா? அவர் இருப்பது பூமிக்குதான் பாரம்.

விரைவில் நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது கால்நடை ஆராய்ச்சி, எரிசக்தித்துறை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைப் பார்வையிட்டு, அவற்றை தமிழகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள நம் நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வர முயற்சிக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT