/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1134.jpg)
கரோனா பெருந்தொற்றால் உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் போராடிவருகிறது. ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பதாகக் கூறி உண்மைக்குப் புறம்பான தகவல்களை இணையதளத்தில் பதிவிட்டு, மக்களின் உயிருடன் சிவகங்கை மாவட்டக் மருத்துவத்துறை விளையாடுவதாக அம்மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் அனேகர் பாதிப்புக்குள்ளான வேளையில், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மக்களிடையே தனிமனித இடைவெளி, முகக் கவசம், சானிடைசர் பயன்பாடு, தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. இதேவேளையில், நோய்த் தொற்றுள்ள மக்களைக் காக்க தமிழகமெங்கும் மருத்துவமனைகளை முடுக்கிவிட்டு, "படுக்கைகளுக்காக அலைய வேண்டாம். எங்கெங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என்பதை இணைய வெளியில் வெளியிட்டுள்ளோம். அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என இணைய முகவரியை வெளியிட்டது. எனினும், மக்களை ஏமாற்றும் விதமாக இங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என இணையவெளியில் தினசரி அப்லோட் செய்துவிட்டு, அங்கு சென்றால் இந்த வசதியே இங்கில்லை எனக்கூறி நோயாளிகளை அலையவிடும் சோகம் சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறிவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_261.jpg)
கரோனா தொற்று நோயாளிகளுக்காக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாக்களில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவமனை, காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை, தேவக்கோட்டை அரசு மருத்துவமனை, திருப்புத்தூர் அரசு மருத்துவமனை, சுவீடிஷ் மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுமாக மொத்தம் மாவட்டத்தில் 1,300 ஆக்சிஜன் படுக்கைகளும், 1,700 சாதாரன படுக்கைகளும் உள்ளன. இதில் 24.05.2021 கணக்கீட்டின்படி இறப்பு 6 எனவும், சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பியோர் 85 எனவும் சிகிச்சையிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,729 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க இளையான்குடி பகுதி மக்களோ, "இளையான்குடியைச் சுற்றியுள்ள 55 கிராமத்திற்கும் ஒரே மருத்துவமனை இந்த இளையான்குடி அரசு மருத்துவமனையே. எங்க ஊர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் வர, ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக இணையதளத்தில் தேடினால் அருகிலுள்ள இளையான்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இருப்பதாக அது தெரிவித்தது. அதனை நம்பி இங்கு வந்து பார்த்தால் ஆண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளும், பெண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளுடன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு படுக்கையும் உள்ளன. ஆனால் ஆக்சிஜன் படுக்கை என்பதே இங்கு கிடையாது. அங்கு கேட்டால் சரியான பதிலில்லை. அதற்கப்புறம் 33 கி.மீ தூரமுள்ள சிவகங்கை மருத்துவமனைக்கு வந்து சேர்க்க வேண்டியதாயிற்று. இதில் ஆக்சிஜனோடு ஆம்புலன்ஸ் கிடைக்க நாங்க பட்ட வேதனை சொல்லி மாளாது. தவறான தகவல்களை இணையத்தில் போட்டு எங்களை அலைக்கழிக்கிறது சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை. இந்த தவறான தகவலால் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு..?" என கேள்வி எழுப்புகின்றனர்.
இளையான்குடி வாசிகளின் கூற்றை உறுதிசெய்யும் விதமாக படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணையதள முகவரியில், இளையான்குடி அரசு மருத்துவமனையில் 37 ஆக்சிஜன் படுக்கைகள், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சிங்கம்புணரி அரசு ஆக்சிஜன் படுக்கைகள் 45 காலியாக உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களை இணையதளம் தெரிவித்துள்ளது. ஏன் இந்தக்குழப்பம்..? என மருத்துவத்துறையிடம் கேள்வி எழுப்பினால், "அங்கெல்லாம் தயார் செய்துகொண்டிருக்கின்றோம். அதனால்தான் அங்கு படுக்கை இருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது" என பதில் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)