
கும்பகோணம் பிரதான சாலைகளில் மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது தொடர்கதையாகிவருகிறது.
சமீபத்தில்கூட கும்பகோணம், துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தனியார் இருசக்கர வாகன கம்பெனி ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், வேலையை முடித்துவிட்டு கும்பகோணம் செல்வம் தியேட்டர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் கருப்பு நிறத்தில் மாடு படுத்திருந்தது தெரியாமல், மாட்டின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மணிகண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். நகராட்சி பகுதியில் வசிக்கும் பலர் தினசரி வருமானத்திற்காக எருமை மற்றும் பசுமாடுகளை வளர்த்துவருகின்றனர். மாடுகளை வளர்ப்போரில் பெரும்பாலானோர் மாடுகளைக் கட்டுவதற்கு கொட்டகை வசதி இல்லாமலேயே வளர்த்துவருகின்றனர். மாடுகளின் கரவை நேரம்போக மீதி நேரம் வீதிகளில் விடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், "நகராட்சி பகுதியில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்க்கின்றனர். ஒரு வீட்டிற்கு பத்து மாடுகளுக்கு குறைவில்லாமல் வளர்த்தாலும், அதனைக் கட்டுவதற்கு தொழுவத்திற்கான இடவசதி இல்லாமலேயே வளர்க்கின்றனர். கரவை நேரத்தில் மாடு எங்கே நிற்கிறதோ அங்கு சென்று பால் கறந்துகொண்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த மாடுகள் நகரத்தில் குவிந்துகிடக்கும் பேப்பர்கள், அழுகிய காய்கறிகள், கீரைகளைத் தின்றுவிட்டு பிரதான சாலைகளிலேயே இரவு, பகல் பாராமல் படுத்துக்கிடக்கும். கொட்டகை வைத்திருக்கும் சிலரும் பால் கறந்ததும் மாடுகளை அவிழ்த்துவிட்டுவிடுகின்றனர். இதனால், கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடக்கூடிய நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் என பிரதான சாலைகளிலும் மக்கள் அடர்த்தியாகக் குடியிருக்கும் பகுதிகளிலும்தான் மாடுகள் வரிசையாக படுத்துக் கிடக்கும். இரவு நேரங்களில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்துவருகிறது. அதோடு, நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் கூட சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையும் அடிக்கடி நடந்திருக்கிறது" என்கிறார் ஆதங்கமாக.
அடிக்கடி விபத்து ஏற்படுவது குறித்து நகராட்சி ஆணையரிடம் சிலர் புகார்கள் அளித்தனர். புகாரின் பேரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினார். ஆனாலும், ஆணையரின் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் வழக்கம்போல் மாடுகளை வீதிகளிலேயே விட்டுவருகின்றனர்.
இரண்டு வாரத்திற்கு முன்பு கும்பகோணம் போலீசாரின் பாதுகாப்போடு நகராட்சி அதிகாரிகள் கும்பகோணம் முக்கிய சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து பழைய நகராட்சி அலுவலகத்திற்குக் கொண்டுவந்து, பிறகு வேன் மூலம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாணாதிராஜபுரத்தில் உள்ள மடத்திற்குச் சொந்தமான கோசாலையில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகும் மாடுகளைச் சாலைகளில் விடுவதை நிறுத்தவில்லை. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இறப்புகளும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் மோதி, இரண்டு பேர் உயிரிழந்தனர். அதேபோல, போலீஸ் ஒருவரும், மாடு குத்தியதில் படுகாயமடைந்தார். இப்படி மாடுகளால் தொடர் அசம்பாவிதம் நடந்தபடியே இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளில் இடையூறாக திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் விட வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்கிறார்கள்.