owner who imprisoned and tortured family members who came to work in Palani

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ளது மேலச்சேரி. இந்தப் பகுதியில் உள்ள மதுரா இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு 26 வயதாகிறது. இவரது மனைவி ரேணுகா. இவருக்கு 20 வயது ஆகிறது. செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் இந்தத் தம்பதிகள், வெளியூருக்குச் சென்று செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, பார்த்திபன், ரேணுகா, ரேணுகாவின் தந்தை நாகப்பன் இவர்களுடன் அவரது உறவினரான சித்தி, சித்தப்பா மேலும் ஒருவர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் செங்கல் தயாரிக்கும் பணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

அதன்படி, இந்த 6 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சேம்பரில் வேலையில் சேர்ந்துள்ளனர். இந்தச் சேம்பரில் நாள் ஒன்றுக்கு கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து 800 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கு தம்பதியரும் சம்மதம் தெரிவித்து வேலை செய்து வந்துள்ளனர்.

Advertisment

இப்படியே கடந்த ஐந்து மாதங்களாக 6 பேரும் கடுமையாக வேலை செய்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த ரேணுகாவின் சித்தப்பா மற்றும் சித்தி இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊருக்கு சென்று உடம்பை கவனித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றுள்ளனர். ஊருக்குச் சென்றவர்கள் ஒரு வார காலமாகியும் செங்கல்சூளை வேலைக்கு திரும்ப வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ரேணுகா இருவரையும் அழைத்து, ஊருக்கு சென்ற உங்களின் உறவினர்கள் உடனடியாக வரவேண்டும். இல்லை என்றால், உங்களை உண்டு இல்லையின்னுனு பண்ணிடுவோம் என மிரட்டியுள்ளார். ஆனால், அவர்கள் இவ்வாறு கூறிய மறுதினமும் ஊருக்கு சென்றவர்கள் வரவில்லை. இதனால், மேலும் ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர், மறுபடியும் ரேணுகாவை அழைத்து,உடனே உங்களின் சித்தப்பா, சித்தி வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்று கூறி மிரட்டியுள்ளார்.

மிரட்டியதோடு இல்லாமல், அவர்களுடன் வேலை பார்க்கும் அஜித் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ஏவி விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரேணுகா முகம் முழுவதும் வீக்கத்தோடும், கண் திறக்கமுடியாத அளவுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது கணவரான பார்த்திபனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அங்கிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு சென்ற தம்பதிகள், போகும் வழியில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற தங்களை, உறவினர்கள் ஊருக்கு சென்று விட்டார்கள் எனக் காரணம் காட்டி கொடூர தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அழுதுகொண்டே வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. அப்போது, இந்த வீடியோவைப் பார்த்த கொத்தடிமைகள் மீட்பு குழுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், அவர்களை முதலில் அங்கிருந்து மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

Advertisment

இதற்கிடையில் இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற செங்கல் உரிமையாளர், மறுபடியும் தம்பதியரை விரைவில் வேலைக்கு வரவேண்டும் எனக்கூறி மிரட்டியிருக்கிறார். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் பலத்த காயத்தோடு சிகிச்சைப் பெற்று வரும் ரேணுகாவிடம் கேட்ட போது, நடந்த அனைத்தையும் விபரமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் போதும், அரசு மருத்துவ மனைக்கு வந்த உரிமையாளர், விரைவில் பணிக்கு வரவில்லை என்றால் பண்ணை வீட்டில் வைத்து மீண்டும் சித்திரவதை செய்வோம் என்று தைரியமாக மிரட்டிச் சென்றதாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.