Skip to main content

      நிலம் கவுருமென்டுக்கு சொந்தம்னா அப்போ ஜனங்க கவுருமென்டுக்கு சொந்தம் இல்லையா? சனங்க சாக வேண்டியதுதானா?

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
salem

 

''இந்த நிலம் கவுருமென்டுக்கு சொந்தம்னு சொல்றாங்க. அப்போ ஜனங்க கவுருமென்டுக்கு சொந்தம் இல்லையா? சனங்க சாக வேண்டியதுதானா?,'' என்று விவசாயிகள் இன்று மீண்டும் போர்க்கொடி உயர்த்தியதால், சட்டப்பூர்வ விசாரணை அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 248 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 


ஆரம்பத்தில் இருந்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கால் அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்ட வருவாய்த்துறையோ, நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் சர்வே எண்களை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, சேட்டிலைட் தொழில்நுட்பத்துடன் நேரடியாக விளை நிலங்களில் ஆள்களை இறக்கி அளவைப்பணிகளை மேற்கொண்டது.


ஆங்காங்கே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவர்களை காவல்துறையினர் மூலம் ஒடுக்கியது. சொந்த நிலத்துக்குள் அத்துமீறிய காவல்துறை, வருவாய்த்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டிகள், இளைஞர்கள் என்றும் பாராமல் பல இடங்களில் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று சிறையில் அடைத்தது காவல்துறை.


நிலங்களை அளந்து முட்டுக்கல் நடப்பட்ட பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956, பிரிவு 3 (சி) (1)ன் படி, ஏற்கனவே சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பெறப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீது மூன்று கட்டங்களாக சட்டப்பூர்வ விசாரணையை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


முதல்கட்டமாக, ஜூலை 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 10ம் தேதியும் சட்டப்பூர்வ விசாரணை நடந்தது. இறுதி மற்றும் மூன்றாம் கட்ட சட்டப்பூர்வ விசாரணை, சேலம் மணியனூரில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 13, 2018) நடந்தது. 


உடையாப்பட்டி (18 பட்டாதாரர்கள்), எருமாபாளையம் (35 பட்டாதாரர்கள்), கெஜல்நாயக்கன்பட்டி (16), நாழிக்கல்பட்டி (47), நிலவாரப்பட்டி (26), பாரப்பட்டி (37), சித்தனேரி (11), உத்தமசோழபுரம் (10), அக்ரஹாரம் பூலாவாரி (37) என மொத்தம் 237 பட்டாதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. 


விவசாயிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்பு அதிகாரியுமான சுகுமார் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். எருமாபாளையத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், ''மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 9 கோடி வரை இழப்பீடு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியோ அல்லது இப்போதைய சந்தை மதிப்புக்கு இணையாகவோ இழப்பீடு கிடைத்தால் நிலத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,'' என்று தங்கள் ஆட்சேபனை மனுவில் கைப்பட எழுதிக் கொடுத்தனர்.


சில விவசாயிகள், தங்கள் வீட்டில் படித்த பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், அரசு வேலை தர முடியாது. வேண்டுமானால் அரசு வேலையில் சேர்வதற்கான முன்னுரிமை சான்றிதழ் தரலாம் என்று கூறி, அதற்கான பரிந்துரையை கோப்புகளில் குறிப்பாக எழுதினார். 


கணவரை இழந்த கைம்பெண் ஒருவர், ''தனக்குச் சொந்தமாக இருக்கும் ஒரு ஏக்கர் நிலமும் எட்டு வழிச்சாலையால் பறிபோகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கிறது,'' என்று கண்ணீர் மல்கக் கூறினார். அவருக்கு உடனடியாக விதவை உதவித்தொகை கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


இதற்கிடையே பூலாவரி, சித்தனேரி, பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டப்பூர்வ விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்றும், நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் ஆட்சேபனை மனுவில் எழுதிக் கொடுத்தனர்.


பூலாவரியைச் சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி அவருடைய மனைவி அம்மாசி ஆகியோர் கூறுகையில்,  எங்கள் நிலம் முக்கால் ஏக்கர் நிலம் இருக்குங்க. எட்டு வழிச்சாலையால் இந்த நிலம் பறிபோவுதுங்க. என்னோட ரெண்டு பசங்களும் பெட்ரோல் பங்குல வேல செய்யுறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒரு வீடு கட்டணும்னாகூட எங்களுக்குனு நிலம் இல்ல. ஆடு, மாடுகள வெச்சிட்டுக்கு எங்க போவோம். நிலம் கவுருமென்டுக்கு சொந்தம்னு சொல்றாங்க. அப்போ ஜனங்க கவுர்மென்டுக்கு சொந்தம் இல்லையா? சனங்க சாக வேண்டியதுதானா?


இருக்கற நாலு வழிச்சாலையை பெருசாக்கினால்கூட பரவாயில்லீங்க. இந்த எட்டு வழிச்சாலையை போட்டு யாருங்க சென்னைக்குப் போகப்போறாங்க? பெரிய பெரிய பணக்காரங்க வேணும்னா போவாங்க. எங்களோட முக்கால் ஏக்கரும் போச்சுனா அவ்வளவுதான். நாங்க எங்கங்க போறது? எல்லாரும் சாக வேண்டியதுதான்.


எங்கள கொன்னுப் போட்டுட்டு நிலத்தை எடுத்துக்கலாம். நாங்க சாவறத தவிர வேற கதியே கிடையாது. எங்க கிணறும் போகுது. இன்னுக்கு விசாரணைனு கூப்பிட்டாங்க. எங்ககிட்ட நிலம் கொடுக்க விருப்பமா இல்லையானு மட்டும்தான் கேட்டாங்க. இல்லைனு சொன்னதும், அப்படீனா மேலே போய் கையெழுத்துப் போட்டுட்டுப் போங்கனு வெளியே அனுப்பிட்டாங்க.


ஏற்கனவே விவாசாயிங்க தானாக முன்வந்து நிலம் கொடுப்பதாக சொல்றாங்க. இப்போ எங்ககிட்ட கையெழுத்து போடுன்னு சொன்னா, அது எதுக்கு என்னனு விளக்கம் சொல்ல மாட்டேங்கறாங்க. நாங்க படிக்காதவங்க... எங்களுக்கு ஆதரவுனு யாரும் இல்ல. என்னனு கண்டு கையெழுத்துப் போட முடியும்?. கருத்து சொல்லுங்கனு கூட்டிட்டு வந்தாங்க... இங்க வந்தா எங்க கருத்த கேட்க யாருமில்ல. 


குடும்பத்தோடு விஷத்த குடிச்சு செத்தாதானே ஒழிய, அந்த காட்டை விட்டுட்டு எங்களால எங்கேயும் போய் வாழ முடியாது. இன்னிக்கு இருக்கற விலைவாசியில அரசாங்கம் கொடுக்கற காச வெச்சிக்கிட்டு 100 அடி நிலம்கூட வாங்க முடியாது. எட்டு வழிச்சாலையில ரெண்டு பக்கமும் சுவர் கட்டிட்டாங்கனா நாங்க எப்படி அந்தாண்ட இந்தாண்ட போக முடியும்?. விளை நிலத்தை பூராவும் எடுத்துப்புட்டா என்னாத்தக் கண்டு நீங்க சாப்பிடுவீங்க...?,'' என்றனர்.


விவசாயி சக்திவேல், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் கூறுகையில், ''ஜூலை 13ம் தேதி ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அதற்கு முன்பே இரண்டு முறை எங்கள் நிலத்தை அதிகாரிகள் அளந்துட்டுப் போய்ட்டாங்க. அப்புறம் எதற்கு இந்த சட்டப்பூர்வ விசாரணை? இது தேவையே இல்லையே? நாங்கள் உசுரகூட விட்டுடுவோமே தவிர, எட்டு வழிச்சாலைக்காக எங்களோட விவசாய நிலத்தை விட்டுத்தர மாட்டோம். இனிமேலும் அதிகாரிகள் எங்கள்¢ நிலத்துக்குள் வரக்கூடாது,'' என்றனர்.


இன்று நடந்த சட்டப்பூர்வ விசாரணையில், அழைப்பாணை அனுப்பப்பட்ட பட்டாதாரர்களில் 126 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். 111 பேர் விசாரணைக்கு வரவில்லை. இன்றுடன், நில எடுப்புக்கான ஆட்சேபனை மனுக்கள் மீதான சட்டப்பூர்வ விசாரணை நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி - மனுகொடுத்த களிமண் மண்பாண்ட சங்கத்தினர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'Plaster of Paris Ganesha idols should be banned'- clay potters petition

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்  உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.

இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Next Story

அதிமுக பிரமுகர் படுகொலை; 9 பேர் கைது - சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
9 people arrested in Salem AIADMK executive Shanmugam case

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவராக இருந்துள்ளார். தற்போது, இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிமுகவினர் அந்தப் பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி துடித்து கண்ணீர் விட்டனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் இவர், சந்துக்கடை வியாபாரம் குறித்தும் லாட்டரி விற்பனை குறித்தும் போலீசாருக்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சண்முகம் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி எனச் சொல்லப்படும் சதீஷ், அருண்குமார், முருகன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்.. திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாகச் சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.