Skip to main content

வெளிநாட்டு வேலையா? போலி முகவர்களை நம்பி ஏமாறாதீங்க - சேலம் கலெக்டர் எச்சரிக்கை

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Overseas job? Don't be fooled by fake agents! Salem Collector Alert!!

 

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இளைஞர்கள் போலி முகவர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அதிக ஊதியம் என்றும் ஆசை வார்த்தை கூறி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கின்றனர்.

 

இவற்றை நம்பி பல கனவுகளுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர், கிரிப்டோகரன்சி போன்ற பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர். இந்த வேலைகளைச் செய்ய மறுக்கும் நபர்களை, அவர்களை அழைத்துச் சென்ற கும்பல் துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. 

 

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், பணியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களையோ தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

 

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அல்லது வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.

 

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் 96000 23645, 87602 48625, 044 28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.