Skip to main content

'இரவுக்குள் சென்று சேரும் தீர்மானம்'-தமிழக அரசு திட்டம்

Published on 09/12/2024 | Edited on 09/12/2024
 'Overnight Resolution'-Tamilnadu Govt

தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த  ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என 10 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அதே சமயம் சட்டப்பேரவையின் கூட்டம் நடைபெற்று முடிந்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளபடி இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றும், நாளையும் (10.12.2024) என இரு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தமிழக  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதாவது, “இவ்விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நீங்கள் முதலமைச்சராக இருந்த போது எத்தனை கடிதங்களை அப்படி வெளியிட்டீர்கள்? எனப் பதிலளித்தார்.

 'Overnight Resolution'-Tamilnadu Govt

அதே சமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. திமுக ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தைத் தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்மைச்ராக இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார். அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தீர்மானத்தை வலியுறுத்தி பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்