
ஈரோடு மாநகராட்சியில் நடைபெறும் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிடக் கோரி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி, குடிநீர் பணிகள், தெருவிளக்கு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர். அதில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் பராமரித்ததில் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாருக்கு வழங்கப்படும் தூய்மை பணிகளை உடனே கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி 5ந் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தினக்கூலிகளாக உள்ள 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கரோனோ கால சிறப்பு ஊதியம் மட்டுமின்றி நிவாரணம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களை எழுப்பினார்கள்.