Out-of-state medical students will be ordered to work in government hospitals for 2 years! - High Court verdict!

அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய வெளிமாநில மாணவ மாணவிகள், இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களில், எம்.பி.பி.எஸ் படிப்பில் 50% சதவீதமும், எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவப் படிப்பில் 15 சதவீத இடங்களும், அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படுகின்றன. முதுகலை மருத்துவப் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. சேர்க்கையின் போதே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுமையான சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Advertisment

இதை எதிர்த்து, தமிழகத்தில் படிக்கக்கூடிய வெளிமாநிலத்தைச் சேர்ந்த அபினயா, அஜய்பாத்திமா உள்ளிட்ட 276 மாணவ,மாணவிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், அகில இந்திய மருத்துவப் படிப்பு தேர்வு குறிப்பேட்டில் இதுபோல் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. இது சட்டவிரோதமானதுஎனத் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் நிபந்தனை விதித்துக் கொள்ளலாம் என்று விதிகள் உள்ளன. மேலும்,தமிழக அரசின் வளத்தைப் பயன்படுத்தக்கூடிய மாணவர்கள், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். அதனால்தான், அந்த இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை கொண்டுவரப்பட்டது என வாதிடப்பட்டது.

Ad

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவப் படிப்பு படிக்கும் அகில இந்திய கோட்டா மாணவர்கள், கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். பணிபுரிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்று தீர்ப்பளித்துள்ளனர். அதே வேளையில், இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் கேட்ட பணியை வழங்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.