ADVERTISEMENT

இந்தியாவுக்கே வழிகாட்டும் இணையற்ற நம் தலைவருக்கு வயது 95! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

01:23 PM May 21, 2018 | Anonymous (not verified)


திமுக தலைவர் கலைஞரின் 95வது பிறந்தநாள் வருகையையொட்டி திமுக தொண்டர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நம் உயிரனைய தலைவரின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட மடல்.

அவருடைய உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை, அரை நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றில்! இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத அருமை பெருமைகளைக் கொண்டவர் நம் தலைவர் கலைஞர். எப்போதெல்லாம் மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் நெருக்கடிகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் தலைவர் கலைஞர் வகுத்தளிக்கும் வியூகங்களே தீர்வுகளாகும் வரலாற்றை தமிழ்நாடும் இந்தியாவும் பதிவு செய்துள்ளன.

இன்று இந்தியாவைப் பிடித்து ஆட்டும் மதவாத சக்தியினால், சிறுபான்மை சமுதாயத்தவர் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த மக்களாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்களாக இருந்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன. அவர்களின் தாய்மொழி மீது இந்தித் திணிப்பு எனும் கொடூர ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்படுகிறது. சமஸ்கிருதம் எனும் பேச்சுவழக்கற்ற மொழிக்குத் தரப்படும் அதீத மரியாதை, அவரவர் தாய்மொழிகளுக்குத் தரப்படுவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்படுகிறது. இசைக்கப்பட்டாலும் அவமரியாதை செய்யப்படுகிறது.

அவரவர் மண்ணுக்கேற்ற-அவரவர் பண்பாட்டுக்குரிய-அவரவர் உடல்திறனுக்கேற்ற உணவை சாப்பிடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, உணவு சாப்பிட்டதற்காக அடித்துக் கொல்லப்படும் அவலத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அப்படிப் பதறுகிற நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள சிந்தனையாளர்கள் - செயல்பாட்டாளர்கள் - அறிஞர் பெருமக்களின் நினைவுக்கு வருபவர் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான-நம் உயிருக்கும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அவர்தான் 14 வயதிலேயே புலி வில் கயல் பொறிக்கப்பட்ட தமிழ்க்கொடியை கையில் ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியவர. 80 வயதிலும் சளைக்காமல் போராடி, வாதாடி தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர். பெரும்பான்மை மக்களும்- சிறுபான்மை மக்களும் சம உரிமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் மதசார்பற்ற கொள்கையைப் பரவச் செய்தவர். மத்திய ஆட்சியாளர்களால் மாநில உரிமைகள் பறிபோகாதபடி மாநில சுயாட்சிக் கொள்கையை முன்னிறுத்தி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் குரல் கொடுத்தவர். தேசிய அரசியலின் பார்வையைத் தென்னகத்தின் பக்கம் திருப்பியதுடன் மட்டுமல்லாமல், தமிழகத்தின் உத்தரவை டெல்லி ஏற்றிடும் வகையில், தெற்கில் உதித்த திராவிடச் சூரியனாக எந்நாளும் ஒளி வீசுபவர். சமூக நீதிக் கொள்கையை வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையின் மூலம் இந்தியாவின் தேசியக் கொள்கையாக மாற்றிய திராவிடப் பெருந்தலைவர்.

தலைவர் கலைஞரின் கண்ணசைவிலும் கருத்துப் பரப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் இந்திய வரலாறு தனது பக்கங்களில் வரவு வைத்துள்ளது. அதனால்தான் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அரசமைப்புச்சட்ட மாண்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், அவரது நினைவு இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்படுகிறது. கட்சி மாறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினரும் கோபாலபுரம் வந்து அவரது உடல்நலனை விசாரிக்கின்றனர். அவரது வாழ்த்துகளைப் பெற்று மகிழ்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் சிலருக்கு அவரை வசைபாடினால் தங்களுக்கு அரசியல் வாழ்வு என்ற நிலை இன்றும் நிலவுகிறது. அண்ணாவின் தம்பியான தலைவர் கலைஞரோ, வாழ்க வசவாளர்கள் என்று அவர்களுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார். மத்தியில் நடைபெறும் எதேச்சதிகார ஆட்சிக்கு, மாநிலத்தில் உள்ள ஆட்சி மண்டியிட்டுக் கிடப்பதால், மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு எனும் கொடுவாள் ஆண்டுதோறும் நரபலி கேட்கிறது. சமூக நீதிக் கொள்கைக்குப் புதைகுழி தோண்டும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாநில அரசாங்கத்தார் வாய் திறக்காமல் மவுனம் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட பதவி சுகத்துக்காகப் பொது உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன.

நெருக்கடி நிலை காலமாக இருந்தாலும், மதவெறி சக்திகளின் கை ஓங்குகிற சூழலாக இருந்தாலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து-ஜனநாயக மீட்புப் போரை முன்னின்று நடத்தி- மதச்சார்பின்மை சக்திகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்டவர் தலைவர் கலைஞர் என்பதை வடபுலத்துத் தலைவர்களும் மனதார ஒப்புக் கொள்கிறார்கள். இன்று இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து-ஒரு மதம்-ஒரு மொழி-ஒரே கலாச்சாரம் -ஒரு கட்சி ஆட்சி என்கிற சர்வாதிகாரப் போக்கு மேலோங்குவதையும், அதற்காக ஜனநாயகத்தின் விழுமியங்களைப் புறக்கணித்து-மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்க நினைப்போரையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரை வைத்துக் கொண்டு மாநிலங்கள் தோறும் மறைமுக ஆட்சி நடத்த நினைக்கும் பா.ஜ.க.வின் எதேச்சதிகாரப் போக்கை தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நேரடியாக அனுபவித்துள்ளன. இந்த நிலை மாறவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டு ஜனநாயகத்தை மீட்கவும், ஓரணியில் நிற்கவேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது தலைவர் கலைஞரின் பேராற்றல்.

தமிழ்நாட்டை அதிககாலம் ஆட்சி செய்த முதல்வர் – அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டுக்குத் தந்து-இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் என்ற பெருமை கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் என்பது, காலண்டரில் கிழித்தெறியும் சாதாரண நாள் அல்ல. காலம் தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாதனைச் சரித்திர நாள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் 95 வயது தலைவருக்கு, பொதுவாழ்வு வயது 81, திரையுலக வயது 71, கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து அரை நூற்றாண்டு, 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை அச்சாணியாகக் கொண்டே சுழல்கிறது.

ஜூன் 3ல் தொடங்கி மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாளை எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அதற்கு கட்டியங்கூறும் வகையில் கழகத்துடன் இணைந்து மக்கள் நலனுக்காகக் களம் காணும் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும், தலைவர் கலைஞர் வளர்ந்த-அவரை வார்த்தெடுத்த-தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவரை வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதியில் ஜூன் 1 அன்று, அண்ணா திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை ஆற்றுகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடனும் நானும் பங்கேற்கிறேன்.

தமிழ்நாடும் இந்தியாவும் இன்றைய சூழலில் எதிர்பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தாலும், அவரது சிந்தனைகளை முறையாகச் செயல்படுத்த - அவரது வழிகாட்டுதலில் மகிழ்வுடன் களம் காண கழகத்தின் ஒரு கோடிக்கும் அதிகமான அவரது உடன்பிறப்புகள் அனைவரும் அணி திரள்வோம்! நாடெங்கும் வீடெங்கும் தலைவர் கலைஞரின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்! அந்த சரித்திர நாயகரின் சாதனைகளை எட்டுத் திக்கும் எடுத்துச் சென்று ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதிவு செய்வோம்!. தலைவர் கலைஞர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் இந்த 95வது பிறந்தநாள்! இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவர் கலைஞர் அவர்கள், நமக்குச் சொந்தமான தலைவர் என்பது நாம் பெற்றிருக்கும் தனித்தகுதி அல்லவா! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT