/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2319.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் தினேஷ் குமார், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் மீது புகார் எழுந்தாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராமையா நேற்று முன்தினம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு ஏற்கனவே அவர் பேசி வெளியிட்டிருந்த ஒரு வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அந்த வீடியோவில் ''என் பேரு ராமையா நான் துளையானூர் பஞ்சாயத்தை சேர்ந்தவன். எனக்கு கல்குவாரி, பெட்ரோல் பங்க், பைனான்ஸ் தொழில் செய்கிறேன். கல்குவாரி நல்லா போகுது. 2020 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுறேன் (இவர் மனைவி தான் ஊராட்சி மன்றத் தலைவர்) அதிமுக வாக்காளர்கள், மக்கள் ஆதரவில் அதிக ஓட்டில் வெற்றி பெற்றேன். எடப்பாடியார் ஊராட்சி தோறும் மினி கிளினிக் ஆரம்பிச்சார். நாங்க கேட்டுக்கிட்டதுக்க இணங்க எங்க ஊருக்கும் வந்தது. இது வயசானவங்களுக்கு உபயோகமா இருந்தது.
அந்த மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு நம்ம மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் வந்தார். நம்ம அதிமுக அமைச்சர் என்பதால துளையானூர் ஊராட்சியில சிறப்பா செஞ்சோம். நானே மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்னு கேட்டுக்கிட்டேன். அதிமுக வந்தா இதுபோல மக்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும் என அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கனு கேட்டுக்கிட்டேன். அப்ப விஜயபாஸ்கர் என்னை அதிமுகவில் சேர்ந்துடுங்கனு கேட்டார்.அப்ப நான் பிறந்ததில் இருந்தே அதிமுக தான் அண்ணே. எங்க குடும்பமே அதிமுக குடும்பம் எல்லாருமே அதிமுகவுக்கு தான் ஓட்டுப் போடுவோம்னு சொன்னேன். அதனால எங்க குடும்பமே விஜயபாஸ்கரோட அதிமுகவோட பாசனமான குடும்பம் தாங்க'' என்று அந்த வீடியோ முடிகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான கல்குவாரிகள் நடத்துறதே அதிமுக காரங்க தான். அதே போல ஜகபர் அலி அதிமுக என்றாலும் அவரைக் கொன்ற ஆர் ஆர் குவாரி ஓனர் ராமையாவும் அதிமுகவின் பாசமான குடும்பம் தான். அப்புறம் எப்படி ஜகபர் அலி கொலைக்கு எதிரா அதிமுக ஆர்வம் காட்டும் என்று சொல்லுங்கள் என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)