Advertisment

“மக்களை பிளவுப்படுத்த அரசியல் செய்பவர்களுக்கு எங்களின் செயல்பாடு சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும்..” - அமைச்சர் சேகர் பாபு  

publive-image

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மாணிக்க விநாயகர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “5 திருக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சோழிங்கர் நரசிம்மர் கோவில், திருநீர் மலை முருகன் கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ரோப் கார் வசதியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலாக ஆய்வுசெய்துவருகிறோம். திருச்சி மலைக்கோட்டை கோவிலிலும் ஆய்வு செய்தோம். விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் உலகத் தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.

Advertisment

இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்புபவர்கள், அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்கிற நிலையில் இருக்கிறார்கள். ஆன்மிகம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுப்படுத்த அரசியல் செய்பவர்களுக்கு எங்களின் செயல்பாடு சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். திட்டத்தை அறிவிக்கும்போது பாராட்டிவிட்டு, இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்பு சந்தேகம் எழுப்புகிறார்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் வார்த்தை ஜாலங்களுக்காக அல்ல, அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

Advertisment

publive-image

தமிழ்நாட்டில் உள்ள 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதைப் பொறுத்து வகுப்புகள் தொடங்கப்படும். இந்துக்களின் முறை வழிபாடு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம் என்கிற சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படிதான் நாங்கள் செயல்படுகிறோம்” என்றார்.

இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

minister sekar babu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe