other states employees tamilnadu chennai high court

Advertisment

வெளிமாநிலத் தொழிலாளர்களை நம்பித்தான், தமிழகம் பிழைக்கக் கூடிய நிலை உள்ளதாக, வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உரிய இடம், உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றமும், வெளிமாநிலத்தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் முறையிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கு இன்று (09/07/2020) மீண்டும் விசாரிக்கப்பட்டது.

Advertisment

அப்போது மனுதாரர், தமிழக அரசு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.அதேபோல, ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநிலத்தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குத்திரும்பிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். மேற்கு வங்க அரசு, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதாக மனுதாரர்சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தைப் பொறுத்தவரை, விவசாயத் தொழிலுக்குக் கூட, வெளிமாநிலத்தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால், தமிழகம் பிழைக்காது என்ற சூழ்நிலை உள்ளது. பல நிறுவனங்கள், வெளிமாநிலத் தொழிலாளர்களை நம்பியே செயல்படுகின்றன. அவர்கள் இல்லாததால், தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.