Advertisment

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 

Organ donation of brain dead youth!

புதுக்கோட்டை விராலிமலை கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது இளைய மகன் முருகேசன்(27), லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் விழாபட்டி அருகே தனது லோடு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகேசனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதித்தனர். அப்போது முருகேசன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நேற்று முருகேசன் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் எடுத்துக்கூறினர். அதனை ஏற்று அரசு விதிகளின்படி உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள், நேற்று இரவு 9-மணிக்கு உடல் உறுப்பு அறுவைச் சிகிச்சையை துவங்கினர். இது இன்று விடியற்காலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதில் முருகேசனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாக தருவதற்கு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகேசனின் உடல் அவரது உறவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் முருகேசனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

இதில், ஒரு கல்லீரல் உறுப்பு கோயம்புத்தூர் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

trichy puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe