An order will be issued tomorrow regarding private schools fees - High Court

கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40, 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

Advertisment

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ம் கல்வியாண்டிலும், 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் எனவும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.