ADVERTISEMENT

விஷாலின் 'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு!

06:24 PM Sep 24, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாகக் கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாமல் விஷால் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.


இதற்கிடையே, இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.


தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை, இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓ.டி.டி-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்றும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.


அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து, வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையைக் கொண்டு 'சக்ரா' என்ற பெயரில் வேறு நிறுவனத்திற்கு படம் எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி 'சக்ரா' படத்தின் டிரெயிலரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, ‘சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என, சக்ரா படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT