Order to prepare a detailed project report for the rehabilitation of Panamarattupatti Lake!

சேலம் பனமரத்துப்பட்டி ஏரியை மறுசீரமைப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் 168.128 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். பனமரத்துப்பட்டி ஏரி நிரம்பும் பட்சத்தில், அதன் நீரை சுத்திகரித்து ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏப். 7ம் தேதி நடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவித்து இருந்தார்.

Advertisment

இதைத் தொடர்ந்து அவர், வெள்ளிக்கிழமை (ஏப். 15) பனமரத்துப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏரியின் பரப்பளவு, நீர்ப்பிடிப்பு பகுதி, மழைக் காலங்களில் ஜருகு மலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து இந்த ஏரிக்கு வருகின்ற தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை அகலப்படுத்துதல், ஆழப்படுத்தி கரைகளை வலுப்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார். ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது, ஏரியைத்தூர்வாரி நீர்நிலைகளை மேம்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, பனமரத்துப்பட்டி ஏரி நிரம்பும்போது அதிலிருந்து ஏரியைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்றார். ஏரியை மறுசீரமைப்பு செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவர் அசோகன், மாநகர பொறியாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment