
குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை (20/08/2021) முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று (19/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் புன்செய் பாசனத்திற்கு 20/08/2021 முதல் 13/10/2021 முடிய மொத்தம் 55 நாட்களில் 40 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டும், 15 நாட்கள் தண்ணீர் விடுவதை நிறுத்தம் செய்தும், 82.944 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை மற்றும் புஞ்சைத் துறையம்பாளையம் கிராமங்களில் உள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.