An order has been issued to pay Rs.1000 to the closed temple staff!

கிராமப் புறங்களில் உள்ள சிறு கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளநிலையில், மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றும் 6,664 ஊழியர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க, இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி தினமலர் திருச்சி -வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கவுசிக் ஆஜராகி வாதாடினார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில், ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்களைச் சேர்ந்த 12,041 ஊழியர்களுக்கு மார்ச் 15 முதல் மே மாதம் 15 வரையிலான இரண்டு மாத காலங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல,மே 16 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்திற்கு தலா 1,500 ரூபாய் வழங்க, தற்போது அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஜூலை மாதம் 1-ம் தேதி முதல்,கிராமப்புறங்களில் உள்ள சிறு கோவில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றி வரும் 6,664 ஊழியர்களுக்கு, ஜூலை மாத நிவாரணமாக தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாககூறினார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.