ADVERTISEMENT

மத்திய மந்திரி கனவில்  ஓ.பி.எஸ். மகன்!

03:56 PM May 24, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட சிலர் போட்டியிட்டனர். இருந்தாலும் இந்த மூவருக்கும் இடையே தான் கடும் போட்டியும் நிலவி வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் கடந்த 18ம் தேதி பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 11லட்சத்து 67ஆயிரத்து 174 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகளை கடந்த 23ம் தேதி தேனி அருகே உள்ள கம்மவர் கலை கல்லூரியில் எண்ணப்பட்டது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கையை காலதாமதப்படுத்தி வந்தனர். அப்படி இருந்தும் தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை முழுமையாக தெரிவதற்குள்ளேயே எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இப்படி தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதல் ரவுண்டிலேயே 3888 ஓட்டுக்கள் ரவீந்திரநாத் பெற்று முன்னிலையில் இருந்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ரவுண்டிலும் இரண்டாயிரம், மூவாயிரம் என கூடுதலாக பெற்று வந்தார். அப்படி இருந்தும் ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடந்து வந்தது.

இந்தநிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு வந்து கட்சிக்காரர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகவும் உசிலம்பட்டி, பெரியகுளம், போடி தொகுதிகளில் வாக்குப் பெட்டிகள் திறந்தும், சீல் வைக்காமலும் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். அதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், மாவட்ட தேர்தல் அதிகாரியான பல்லவி பல்தேவை சந்தித்து வாக்கு எண்ணிக்கையை துரிதப்படுத்த வேண்டும். வாக்குப்பெட்டியில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு சென்றார். அதேபோல் தங்கத்தமிழ்ச்செல்வனும் திடீரென வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து வாக்கு எண்ணிக்கையை உடனே துரிதப்படுத்துங்கள்.

தமிழகம் முழுவதும் திமுக முன்னிலையில் வரும்போது இங்கு மட்டும் ஓபிஎஸ் மகன் எப்படி முன்னிலை வருவார். இதில் ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்று காரசாரமாக பேசிவிட்டு சென்றார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடையே சில சலசலப்பும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைவிட ரவீந்திரநாத்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்றதின் மூலம் பதிமூன்றாவது ரவுண்டிற்கு மேல் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்துவந்தார். அதன்மூலம் ரவீந்திரநாத்குமாரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

அதைத் தொடர்ந்து இறுதிசுற்று வரை முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார். இதில் ரவீந்திரநாத்குமார் 5லட்சத்து 708 வாக்குகளும், அதுபோல் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4 லட்சத்து 25ஆயிரத்து 370 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 42ஆயிரத்து 828 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் 75ஆயிரத்து 375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோல் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளரான ராதாகிருஷ்ணன் 16ஆயிரத்து 796 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சாகுல்அமீது 27ஆயிரத்து 664 ஓட்டுக்களும், நோட்டாவுக்கு 10ஆயிரத்து567 ஓட்டுக்களும் விழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் 38 தொகுதிகளில் போட்டியிட்டும் கூட 37 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் ஒரே தொகுதியான தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில கடும் போராட்டத்திற்கு இடையே வெற்றி பெற்றார். இந்த விசயம் ரவீந்திரநாத்குமாருக்கு தெரியவே மாவடட செயலாளர் சையதுகான், மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடைராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாலையில் வாங்கினார்.

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத்குமாரும்... எனது இந்த வெற்றியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன் அதுபோல் வாக்களித்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சனைகளையும் கூடிய விரைவில் தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்று கூறியவரிடம் தமிழகத்திலேயே நீங்கள் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்குமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மந்திரி பதவியை பற்றி கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டார்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT