OPS says Steps should be taken to transform the prison dept into a clean dept 

Advertisment

சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு. க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றவாளிகளை சிறையில் அடைத்து, எதிர்காலத்தில் குற்றம் இழைக்காத வண்ணம் சீர்திருத்தி, அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் புனிதமானப் பணியை சிறைத் துறை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சிறைத் துறையை போதைத் துறையாக மாற்றிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்குக் காரணம் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டது.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் புழக்கத்தில் இருந்துவந்த போதைப் பொருட்களின் நடமாட்டம் தற்போது சிறைச்சாலைகளுக்குள்ளேயும் புகுந்துவிட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைபேசி மூலம் பேச வேண்டியவர்களுடன் பேசி, எதிரிகளை தீர்த்துக்கட்ட திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. அண்மையில், பூந்தமல்லி சிறையில் கைதிகள் அறைகளிலிருந்து ஸ்மார்ட் போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதையடுத்து துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டியவர்களே குற்றங்களுக்கு துணைபோவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இதன் காரணமாகத்தான், குற்றவாளிகளை கண்டு காவல் துறையினர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை நீடித்தால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, சிறைச்சாலைகளில் நிலவும் போதைப் பொருட்கள் புழக்கம், கைபேசி மூலம் வெளியாட்களுடன் பேசி கொலைவெறித் தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், அரசு அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் உள்ள நெருக்கம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தி சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.