OPS request to Tamil Nadu government regarding procurement of paddy bales

22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள அனைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவநிலை மாற்றம் காரணமாக, வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்குவதும், வடகிழக்கு பருவமழை காலத்தையும் தாண்டி மழைப் பொழிவு இருப்பதும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதும் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருப்பதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து, அவற்றை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மறுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவது விவசாயிகள். இந்த ஆண்டும் இந்த நிலைமை நீடிக்கிறது.

Advertisment

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ், 17 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்ய மத்திய அரசு இந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைப் பொழிவு மற்றும் பனிப் பொழிவு காரணமாக, விவசாயிகள் நெல்லை உலரவைக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மறுத்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றாலும், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்வருதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நெல் மூட்டைகளை வெட்ட வெளிச்சத்தில் வைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். இதுவும், நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், இந்த நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டு இருக்காது.

Advertisment

மழைப் பொழிவு, பனிப் பொழிவு மற்றும் உடனுக்குடன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாதது ஆகியவை நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதற்கு காரணங்களாக இருக்கின்ற நிலையில், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசின் அனுமதி இது தொடர்பாக கோரப்பட்டிருப்பினும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள அனைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.