Skip to main content

“சாலை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” - ஓ.பி.எஸ் வேண்டுகோள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

OPS request our government to complete the road construction work quickly

 

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் வேளாண் வளர்ச்சியிலும், தொழில் முன்னேற்றத்திலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதிலும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதிலும், பயண நேரத்தினை குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுவது சாலைக் கட்டமைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சாலைக் கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில், சிறந்த சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பது, புதிய சாலைகளை அமைப்பது, ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவது ஆகியவற்றை முனைப்புடன் செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உண்டு. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதைப் பார்க்கும்போது, இந்தப் பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

 

உதாரணமாக, சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை என்பது ராமாபுரத்தையும் - குன்றத்தூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டதட்ட 8 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாகவும், ஓராண்டிற்கும் மேல் இப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த பகுதிகளில்கூட சாலைகள் போடப்படவில்லை என்றும், இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வது அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து என்றும், இந்தச் சாலையில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் வர மறுக்கின்றனர் என்றும், அப்படி வந்தாலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களும், அப்பகுதி வழியாக செல்பவர்களும் தெரிவிக்கின்றனர்.

 

இது தவிர, பெரும்பாலான இடங்களில் புதிய தார்ச் சாலை போடுவதற்காக சாலையின் மேற்பரப்புகள் அகற்றப்படுகின்றன. முகப்பேரிலுள்ள பாரி சாலை, ஜமாலியாவிலுள்ள ஹைடர் கார்டன் தெரு, மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி சாலை, மணப்பாக்கத்தில் உள் புறத்தில் உள்ள சாலைகள் உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் மேற்பரப்புகள் அகற்றப்பட்டு பல நாட்களாகியும் புதிய தார்ச் சாலை போடப்படாத நிலை நிலவுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதற்குக் காரணம் ஆட்கள் மற்றும் இயந்திரங்களை குறித்த நேரத்தில் ஒப்பந்ததாரர்களால் எடுத்துவர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

 

மேலும், ஒரே ஒப்பந்ததாரர் சாலைகளுக்கான பல ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் காரணமாக, இயந்திரங்களின் வாடகையினை சேமிக்கும் வகையில், முதலில் சாலைகளின் மேற்பரப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வதாகவும், அவர்களிடம் புதிய சாலையைப் போடுவதற்கான இயந்திரங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இருப்பதால் புதிய சாலைகள் போடுவதில் தொய்வு ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஓரிரு இயந்திரங்களை வைத்துக் கொண்டு பல சாலைகளுக்கான பணிகளை ஒரே ஒப்பந்தக்காரர் மேற்கொள்ளும்போது இது போன்ற தாமதங்கள் ஏற்படுகின்றன.

 

ஒப்பந்தப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கும் முன்பே அவர்களிடம் போதுமான ஆட்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ளனவா என்பதையறிந்து கொண்டு ஒப்பந்தங்களை அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் காரணமாக சாலைப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மக்களும், வாகன ஓட்டிகளும்தான். மக்களின் சிரமங்களை வெகுவாக குறைக்கும் வகையில், ஒரு சாலைப் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும்போது, ஒவ்வொரு பணியும் குறித்த காலத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

 

அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விரைந்து முடிக்கவும், மணப்பாக்கம் நெடுஞ்சாலையை உடனடியாக சீர்செய்யவும் முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.