Advertisment

பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா! மாட்டுவண்டியில் வந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!!

ops joins pennycuick birthday function

Advertisment

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிக் கொடுத்த பென்னிகுவிக்கின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று நடைபெற்ற பென்னிகுவிக்கின் 180 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

தென்மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இதனைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் யான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட ஐந்து மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைப்பதோடு அவர்களுடைய தொழில் நிறுவனங்களுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட பென்னிகுவிக் பிறந்தநாள் ஜனவரி 15வது நாள் என்பதால், அன்றைய தினம் பென்னிகுவிக்குக்கு பொங்கல் வைத்து வழிபடுவதும் வழக்கம்.

அந்தளவுக்கு தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பென்னிகுவிக்கிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அதன் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்தக் கோரிக்கைகளை ஏற்று லோயர் கேம்பில் பென்னிகுவிக்கிற்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார். ஆனால் அதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Advertisment

ops joins pennycuick birthday function

இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் லோயர் கேம்பில் உள்ள மணி மண்டபத்திற்கு நேற்று சென்று பென்னிகுவிக் படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்குள்ள புகைப்பட கண்காட்சியைத் துவக்கி வைத்து, முல்லை பெரியார் அணை உருவான வரலாற்றுப் படங்களைப் பார்வையிட்டார். போடி அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள் தைப்பொங்கல் விழாவை பென்னிகுவிக் நினைவாகப் பொங்கல் வைத்து அவரை வழிபடுவதை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.

அதுபோல் இந்த ஆண்டு பென்னிகுவிக் பிறந்த நாளை அரசு விழாவாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பாலார்பட்டியில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராகத் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அவரை ஊர் மக்கள் தேவராட்டம் சிலம்பாட்டத்துடன் வரவேற்றனர். அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மாட்டு வண்டியை ஓட்டியபடி அப்பகுதிக்கு வந்தார். அதன் பின் பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் ஓ.பி.எஸ்.

சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலைநிகழ்ச்சிகள், பானை உடைப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார் ஓ.பி.எஸ். அப்போது அங்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகள்

சிலருக்கும் பெயர்களைச் சூட்டினார். வருடந் தோறும் பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்த நாள் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டதால் இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இதில் எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட மாவட்ட அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்

ops Theni
இதையும் படியுங்கள்
Subscribe