Advertisment

“அரசுக்கு சொந்தமான கோயிலை அபகரிக்க நினைக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்” - தங்கதமிழ்செல்வன்

publive-image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளீதரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

Advertisment

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கதமிழ்செல்வன், “இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோயிலை, ஓ.பி.எஸ் குடும்பத்தினர் தங்கள் கோயிலாக நினைத்து கடந்த 20 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வந்தனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறுவதால் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அதனை ஏற்க மறுத்து எங்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

Advertisment

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு அங்கீகாரம் ஏதும் இல்லாததால் அது கலைக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று முதல் தீபம் ஏற்றி வந்த கைலாசபட்டியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உரிமையைப் பறித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக தீபம் ஏற்றி வந்தனர். இந்த ஆண்டு எங்கள் முயற்சியால் அந்தச் சமுதாயத்தினருக்கு முதல் உரிமை வழங்கி தீபம் ஏற்ற வைத்தோம்.

அரசுக்கு சொந்தமான கோயிலில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு பரிவட்டம் கட்டாமல், இந்தக் கோயிலின் முன்னாள் பூசாரி நாகமுத்து கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா, அவரது மகன் மற்றும் ஓ‌.பி.எஸ்-ன் மகனுக்கு பரிவட்டம் கட்டியது சமூகநீதி மீறும் செயலாகும். பெரியகுளம் எம்.எல்.ஏ. தலித் என்பதால் இது நடந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

எம்.எல்.ஏ. சரவணகுமார்மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அந்தக் கோயிலில் சமூகநீதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான கோயிலை ஓ.பி.எஸ் அதிகாரத்தால் தங்கள் சொந்தக் கோயில் என நினைத்து அபகரிக்க பார்க்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மகன் கூறுவதைப் போல ரவுடிகளைக் கூட்டி வந்திருந்தால் தீபத்தை நாங்களே ஏற்றி இருப்போம். அந்த குருக்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் கொண்டு வரும் தீபத்தை ஏற்றுவதற்காக 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நிர்வகிக்கிற இந்தத்தமிழகத்தில் ஒரு சமூகநீதி மறுப்பு நிகழக்கூடாது என்பதால் தான் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுகின்றோம். நிச்சயமாக அந்தக் கோயில் ஓ.பி.எஸ். குடும்பத்தின் கோவில் என்று இல்லாமல் பொதுக்கோவிலாக மாறும் போது மக்கள் தாராளமாகச் சென்று தரிசனம் செய்யும் நிலைமையை உருவாக்குவோம். தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என்பதை மறந்துவிட்டு, அரசு நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். கோவில் பூசாரியின் வேஷ்டியை சட்டமன்ற உறுப்பினர் பிடித்து இழுத்ததாக கூறுவது தவறான செய்தி. தவறி கீழே விழப் போனவரைத்தான் எம்.எல்.ஏ. பிடித்தார்.

இந்தக் கோயிலின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரையும் பணிமாறுதல் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அந்தக் கோயிலுக்குள் வராமல் தடுக்க முடியும். இந்தக் கோரிக்கையும் ஆட்சியரின் முன் வைத்துள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரும் மனு கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ‘இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம்’ என ஆட்சியர் உறுதி அளித்து இருக்கிறார்” என்று கூறினார்.

admk ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe