தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாகபயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.
இதனையடுத்து கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி தாலுகா ஆயங்குடி பள்ளம், தரங்கம்பாடி தாலுகா ஒழுகை மங்கலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்த சம்பா, தாளடி பயிர்கள் உள்ளிட்டவற்றை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் அங்குள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள், பாய், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் சமயபுரம் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் காரில் வந்த அவருக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் கொத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கு.பா கிருஷ்ணன், பூனாட்சி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.