Skip to main content

தேர்தல் செலவுக்கு தலா ஒரு லட்சம்! அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர்!!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இடைத்தேர்தலும் கூடிய விரைவில் வரப்போகிறது.  இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.   கட்சிகாரர்கள் சீட்டுக்காகவும் போட்டி போட்டு கொண்டு கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஆளுங்கட்சியினர் எப்படியாவது, வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்களை பணத்தால் அடித்தும் விலைக்கு வாங்க தயாராகி வருகிறார்கள்.  அதற்காக அமைச்சர்களும் தேர்தல் செலவுக்காக ஒரு புறம் பணத்தை குவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

sp

 

அதன் அடிப்படையில் தான் இபிஎஸ், ஓபிஎஸ்  அமைச்சரவையில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தன்னுடைய தேர்தல் செலவுக்காக பணம் வசூலில் இறங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவே நாமும் விசாரணையில் இறங்கினோம். உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருப்பதால் தனது துறையில் உள்ள அதிகாரிகளை மிரட்டி தன்னுடைய தேர்தல் செலவுக்காக ஒரு கணிசமான தொகையை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வசூலித்து வருகிறாராம். 

 

இது சம்பந்தமாக தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிலரிடம் கேட்டபோது...... எங்க துறை அமைச்சர் வேலுமணி ஆபிசிலிருந்து போன் வந்ததாக கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி. பஞ்சாயத்து அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு தேர்தல் வர இருப்பதால் அமைச்சருக்கு தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கிறதாம். அதற்காக ஒவ்வொரு பேரூராட்சி செயல் அலுவலர்களும் தலா ஒரு லட்சம் தரவேண்டும் என கூறி இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இன்னும் இரண்டு நாளில் ஒரு லட்சம் ரூபாய் ரெடி பண்ணி அலுவலகத்தில் கொண்டுவந்து கொடுங்கள் அல்லது சங்கத்தில் உள்ள ஒரு சிலரை நாம் வசூலித்து கொடுப்பதற்காக  நியமித்திருக்கிறேன்.  அவரிடம்  கொடுத்தாலும்  இங்கு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.  இப்படி நீங்கள் கொடுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பணத்தை  அமைச்சர் ஆட்களே நேரடியாக வந்து எங்களிடம் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள் என மாவட்ட ஏ.டி. அலுவலகத்திலிருந்து அதிரடி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாங்களும் பணத்தை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

 

s

 

 திடீரென எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டால் நாங்கள் என்ன பண்ண முடியும்.  அப்படி அமைச்சர் கேட்ட பணத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்றால் அதை மனதில் வைத்துக் கொண்டே தேர்தல் முடிந்த பிறகு வேறு  மாவட்டத்திற்கு தூக்கி அடித்து போட்டுவிடுவார்கள்.   அதனால நண்பர்களிடமும் வட்டிக்கும் கூட வாங்கி பணத்தை சேர்த்து வருகிறோம்.  இப்படி நாங்கள் கொடுக்கக்கூடிய பணத்தை  பேரூராட்சிகளில் ஏதாவது   செலவு செய்தது போல் தான் பில் எழுதி  சரி செய்யப்பட வேண்டுமே தவிர நாங்கள் கைகாசு போட முடியாது.  இதனால் மக்களின் வரிப்பணம்தான்  வீணாக போகிறது. 

 


 அமைச்சராக இருப்பதால்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி துறை  ரீதியாக  எங்களை போல் உள்ள அதிகாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.  ஏற்கனவே சேலம் உள்பட சில மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலா ஒரு லட்சம் வீதம் அமைச்சருக்கு தேர்தல் கலெக்ஷன் கொடுத்து விட்டார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் தேனி மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளிலும் உள்ள செயல் அலுவலர்களின் மூலமாக வசூலிக்கப்படும் 49 லட்சம் மாவட்ட ஏ.டி. அலுவலகத்தில் இருந்து அமைச்சர் ஆதரவாளர்கள் கைக்கு கூடிய விரவில் போகப் போகிறது.  அதன் பின் அமைச்சருக்கு  போக இருக்கிறது இப்படி தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மூலம் பல கோடியை  தேர்தல் செலவுக்காக  அமைச்சர் பகல்  கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி வருகிறார் என்று கூறினார்கள். 

 


இந்த குற்றச்சாட்டுகளை பற்றி அமைச்சர் வேலுமணியிடம் விளக்கம்  அறிய அமைச்சரின் பி.ஏ.சந்தோஷ்-ஐ  தொடர்பு கொண்டு கேட்டபோது... அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார்.  தகவல் சொல்கிறேன் என்று தொடர்ந்து கூறினார்.       இப்படி தேர்தல் செலவுக்காக அமைச்சர் வேலுமணி தனது ஆதரவாளர்களை வசூலிலில் இறக்கி இருப்பது அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.