
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், மிகுந்த வேதனை அடைந்த ஓ.பி.எஸ்., கடந்த இரண்டு மாதங்களாகவே பெரிதாகப் பொதுநிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்தார்.
தொடர்ந்து பெரியகுளம் வீட்டிலேயே இருந்துவந்த ஓ.பி.எஸ்., சமீபத்தில் தனது போடி வீட்டில் தங்கிவருகிறார். ஓ.பி.எஸ். எப்பொழுதும், தனது தொகுதியில் நடக்கும் நல்லது, கெட்டதில் தவறாமல் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், மனைவி இறந்தபிறகு எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார். இந்நிலையில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு முன்னாள் மாவட்ட பொறுப்பாளரான முத்து விஜயனுடன் டூவீலரில் உட்கார்ந்துகொண்டு போடி நகரில் பல்வேறு அதிமுக பிரதிநிதி வீடுகளுக்குச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

போடி நகர், 28வது வார்டு செயலாளர் குமரேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ள முடியாததால் அவர்கள் வீட்டுக்கே சென்று வாழ்த்துக்கள் கூறினார். அதன் பின் 12வது வார்டு பிரதிநிதி செல்லப் பாண்டியன் மகன் நந்தகுமார் சத்யா திருமணத்திற்கும் கலந்து கொள்ளாததால், அவர்கள் வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து 29-வது வார்டு செயலாளர் வீரகுமார் திருமண இல்ல விழாவுக்குச் செல்லாததால் அவர்கள் வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் அருண்குமார் பரமேஸ்வரி திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாததால் தீபாவளியை முன்னிட்டு அவர்கள் வீட்டுக்கும் சென்று வாழ்த்துக்கள் கூறினார். இப்படி போடி நகரிலுள்ள சில கட்சிக்காரர்கள் வீடுகளுக்குச் சென்று தனது வாழ்த்துக்களைக் கூறினார். இப்படி திடீரென ஓ.பி.எஸ். டூவீலரில் போய் இறங்கி வருவதைக் கண்டு கட்சிக்காரர்களும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.