/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops323211_0.jpg)
சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடியை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தார். அவருடன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கட்சி அலுவலகம் வந்தனர்.
அதேபோல், கட்சியின் தலைமை அலுவலகத்தின் மாடிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், எம்.ஜி.ஆர்., ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.
முன்னதாக, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், காவல்துறையினர் 2 பேரும் காயமடைந்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில், ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)