OPS Adjournment of case on

தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.72 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாகக் கடந்த 2012 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில்,ஓ. பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள்,மகள், சகோதரிகள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ. பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, 'லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்குகளில் ஆட்சியாளர்கள் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு ஏற்ப பச்சோந்தி போல லஞ்ச ஒழிப்புத்துறை மாறிக்கொண்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை யாருக்கும் சாதகமானதாக இல்லாமல் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டும்தான் லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கியதற்கான நோக்கமும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும். எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையாக இருந்தாலும் சரி, லஞ்ச ஒழிப்புத் துறையாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலை எடுக்கப்பட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிட்டு போய்விடலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. இதனால் ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்வதில் எந்தவித தவறும் இல்லை.

Advertisment

பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு 374 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான வழக்குகளில் இதுவும் ஒன்று. சிறப்பு நீதிமன்றம் அளித்த அத்தனை உத்தரவுகளையும் ஆராயத் தயாராக இருக்கிறோம். அதன் அடிப்படையில் ஓ. பன்னீர்செல்வத்தின் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார், சகோதரர்கள் ஓ. ராஜா, பாலமுருகன், அவரவர்களுடைய மனைவிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.09.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ. பன்னீர் செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குவழக்கின் ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி, வழக்கை நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.