
மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கட்டவிருக்கும் அந்த மருத்துவமனைக்கு ஏற்கனவே நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் தலைவராக வெங்கடேஷ்வரா என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த (23.03.2021 தேதி) திமுக இளைஞர் அணிச் செயலாளர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில், திமுகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “ஞாபகம் இருக்கா, மூனு வருஷத்துக்கு முன்னாடி அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கினாங்களே, அதைக் கையோடு எடுத்துட்டு வந்துட்டன்” என்று ஒரு செங்கல்லைத் தூக்கி, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் காண்பித்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இன்னும் கட்டி முடிக்காமல் அப்படியே கிடப்பில் இருப்பதை விமர்சித்து வாக்கு சேகரித்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்த நிலையில் தற்போது, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இன்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.