
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் மெரினா கடற்கரை என 372 இடங்களில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காகவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகவும் தனியாருக்குக் கடந்த ஓராண்டாகப் பரிசோதனை அடிப்படையில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒருவர் பயன்படுத்தும் கழிவறை இருக்கை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 115 மடங்கு அளவில் ரூ. 364 பராமரிப்பு தொகை கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது ஒருவர் பயன்படுத்தும் கழிவறை இருக்கை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில், அனைத்து கழிப்பறை பராமரிப்பு பணிகளையும் எட்டு ஆண்டுகளுக்குத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாநகராட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தூய்மை பணியை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் 430 கோடி ரூபாய்க்குத் தனியார் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் சார்பில் பராமரிக்கப்படும் கழிப்பறைகளுக்கு மக்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை பணியைத் தனியாருக்கு வழங்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட 4 கடற்கரை தூய்மை பணிகளையும் தனியாருக்கு வழங்கச் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் ஓராண்டுக்கு தூய்மைப்பு பணி மேற்கொள்ள 7.9 கோடிக்கு ஒப்பந்த மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற 4 கடற்கரையில் ஓராண்டுக்குத் தூய்மை பணிமேற்கொள்ள 4.54 கோடி ஒப்பந்தம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது.