Advertisment

“எதிர்க்கட்சிகள் அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன” - அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!

Opposition parties only throw slanders Minister Duraimurugan Furious

Advertisment

சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டு, அரசின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளை பரப்பி வருகின்றனர் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்' என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த விதிகளின் 2வது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படிதான் தொடர்ந்து முன் கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர். திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார்.

ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார். அது அரசின் கவனத்திற்கு வந்து, உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பெஞ்சல் புயல் நவம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கரையை கடந்த போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழை பெய்தது.

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் 1ம் தேதி அதிகபட்சமாக 23.10 செ.மீ மழையும், 2-ம் தேதி 18.50 செ.மீ மழையும் மொத்தம் இரண்டு நாட்களில் 41.60 செ.மீ மழை பெய்தது. அதே போல் தென்பெண்ணையாற்றின் மேற்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்தது. குறிப்பாக ஊத்தங்கரையில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள முக்கிய நீர் தேக்கங்களான கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணைகள் ஏற்கனவே முழுக்கொள்ளளவை எட்டியிருந்தது. பெஞ்சல் புயலினால் பெய்த அதீத கனமழையினால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்க தொடங்கியது.

இவ்வாறு பெரு மழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. ஆணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? பொருட்சேதங்களையும், உயிர்சேதங்களையும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பெரிய அளவில் பாதிப்புகளோ உயிர் இழப்புகளோ ஏற்படாமல் அரசு மக்களைப் பாதுகாத்தது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்பாக அடுத்தடுத்து எச்சரிக்கைகளை அரசு சொல்லிக் கொண்டே இருந்தது.

5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1.80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், ஆணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிகச் சாதுரியமாகச் செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பதை நீர் மேலாண்மை அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்குப் புரியும். நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள், விவசாய நிலங்கள் தான் மட்டுமே வெள்ள நீரில் மூழ்கியது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க் கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது” எனத் தெரிவித்துள்ளார்.

dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe