/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-in_33.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு, காமாட்சிப்பேட்டை ஆகிய கிராமங்களையொட்டி கெடிலம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு அதிகாரிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆயத்தப் பணிகளை தொடங்கினர். ஆனால் மணல் குவாரி அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் அரசு அதிகாரிகள் மணல் குவாரி அமைப்பதற்கான ஆயத்த பணிகளை கடந்த இரு நாட்களாக தீவிரப்படுத்தி வருகின்றனர். மணல் அள்ளி செல்லும் வாகனங்கள் செல்வதற்கான வழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர்.
இந்த நிலையில் மணல்குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் சபா ராஜேந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் வெங்கடசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் தேவராசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_219.jpg)
அதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதேசமயம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்திற்கு வராததை கண்டித்து ஆற்றில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என எம்.எல்.ஏ. சபா.பாலமுருகன் அறிவித்தார். மேலும் கிராம மக்கள் போராட்டத்தை பங்கேற்பதற்காக திரண்டு வந்தனர். அவர்களை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே சுரங்கத் துறை பொறியாளர்கள் ஆற்றுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதில்லை என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் பிரகாஷ், 'கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் முடிவு செய்யலாம்' என்றும், 'அதுவரை மணல்குவாரி இயங்காது என்றும் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ-வும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஆற்றில் இறங்கி மக்களுடன் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)